இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் முதல் மைல்கல்லை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா.
இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சின் மூலம் முதல் டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் 95 ரன்களில் சுருண்டது. புவனேஸ்வர் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் டக் அவுட் ஆக்கினர்.
இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆட்டத்தின் 5வது ஓவரில் தனது முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி இடதுகை பேட்ஸ்மேன்களான நிக்கலஸ் பூரான் மற்றும் ஷீம்ரன் ஹேட்மயர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா மற்றும் க்ருநல் பாண்டியா ஆகியோர் தங்களது மாயாஜால சுழலில் மேற்கிந்தியத் தீவுகளை சுருட்டினர்.
நவ்தீப் சைனி 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
முதல் டி20யில் இந்திய அணி மிகவும் தட்டுத் தடுமாறி 6 விக்கெட்டுகளை இழந்து 96 என்ற இலக்கை 18வது ஓவரில் எட்டியது. விராட் கோலி 14வது ஓவரில் வீழ்த்தப்பட்டார். அப்போது இந்திய அணி வெற்றி பெற 5 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 27 ரன்கள் தேவைப்பட்டது. அச்சமயத்தில் பௌலிங் ஆல்-ரவுண்டர்களாக க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இனைந்து இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தனர்.
இரண்டாவது டி20யில் ஆரம்பத்தில் ரோகித் சர்மா மற்றும் இறுதியில் க்ருநல் பாண்டியா ஆகியோர் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். ரோகித் தனது ஆட்டத்திறனை சிறப்பாக தொடர்ந்து 51 பந்துகளில் 67 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. ஷீகார் தவான் (23) மற்றும் விராட் கோலி (28) ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் மீண்டுமொருமுறை சொதப்பி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் அடித்திருந்தது. ரோவ்மன் பவ்ல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இவர் 3வது விக்கெட்டிற்கு நிக்கோலஸ் பூரானுடன் இனைந்து 76 ரன்கள் குவித்தார். இருப்பினும் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை குறுக்கிடும் முன்பாக க்ருநல் பாண்டியா இரு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
சற்று தடுமாற்றத்ததுடன் விளையாடிக் கொண்டிருந்த நிக்கலஸ் பூரானை க்ருநல் பாண்டியா வீழ்த்தினார். இவர் விளாசிய பந்து பவுண்டரி லைனில் மேல்நோக்கி சென்ற போது மனிஷ் பாண்டே பிரம்மாண்டமான கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதே ஓவரின் 5வது பந்தில் ரோவ்மன் பவ்ல்-இன் கேட்சை க்ருநல் பாண்டியா பிடித்து மேற்கிந்தியத் தீவுகளின் சேஸிங் கனவை களைத்தார். 5 நிமிடத்தில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்கள் மற்றும் மழை குறுக்கிடு ஆகியவை ஆட்டத்தின் முடிவை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றியது. டக்வொர்த் விதிப்படி அமைந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அடையவில்லை.
இறுதியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20யில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டி முடிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது திட்டம் சரியாக வேலை செய்துவிட்டதாகவும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது டி20யில் இந்திய அணியில் ஏற்பட வாய்ப்புள்ள 3 மாற்றங்களை பற்றி காண்போம்.
#1 ரோகித் சர்மா-விற்கு பதிலாக லோகேஷ் ராகுல்
ரோகித் சர்மா 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிருந்து சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். அத்துடன் தற்போது நடைபெற்று முடிந்த இரு டி20 போட்டிகளிலும் இந்தியா சார்பில் அதிக ரன்களை குவித்துள்ளார். எனவே ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்க இதுவே சரியான நேரம். இவரது இடத்தில் லோகேஷ் ராகுலை, ஷீகார் தவானுடன் களமிறக்கலாம்.
கே.எல்.ராகுல் சிறந்த டி20 கிரிக்கெட்டில் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். 20 சர்வதேச டி20யில் களமிறங்கிய இவர் 44 சராசரி மற்றும் 149 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 879 ரன்களை விளாசியுள்ளார். ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்குப் பின்னர் சர்வதேச டி20யில் சதம் விளாசிய 3வது இந்திய வீரர் கே.எல்.ராகுல். இவர் தனது 24 டி20 இன்னிங்ஸில் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களை குவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இவரது சிறந்த பேட்டிங் ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு, மிகவும் சவாலான இந்த தொடரில் இந்திய அணியின் மூன்றாவது சம்பிரதாய டி20யில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இவரை தொடர்ந்து 3 போட்டிகளில் வெளியே அமர்த்த இந்திய அணி விரும்பாது. அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இவர் களம் காண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை கருத்தில் கொண்டு 3வது டி20யில் ராகுலை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்யும்.
#2 புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சகார்
தீபக் சகார் இங்கிலாந்துடனான ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இப்போட்டியில் ஜேஸன் ராயின் விக்கெட்டை இவர் வீழ்த்தினார். ஆனால் தனது பௌலிங்கில் 43 ரன்களை வாரியிறைத்தார்.
ஸ்விங் பௌலரான இவர் பவர்பிளேவில் சிறப்பாக வீசும் திறமை உடையவர். 2019 ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இவ்வருட ஐபிஎல் தொடரில் தீபக் சகார் வீழ்த்திய 22 விக்கெட்டுகளுள் 14 விக்கெட்டுகள் பவர் பிளேவில் வீழ்த்தப்பட்டதாகும்.
தீபக் சகார் மூன்றாவது டி20யில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ராகுல் சகார்
ராகுல் சகார் கடந்த ஐபிஎல் தொடரில் 6.55 எகானமி ரேட்டுடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இவரது அற்புதமான பௌலிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் 4வது முறையாக சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இவர் வீழ்த்திய மிகப்பெரிய விக்கெட்டுகள் பின் வருமாறு: ஜானி பேர்ஸ்டோ, ஷீகார் தவான், ஜாஸ் பட்லர், ஷீகார் தவான், அஜீன்க்யா ரகானே, பென் ஸ்டோக்ஸ், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் லின் மற்றும் ஃபேப் டுயுபிளஸ்ஸி
2019 ஐபிஎல் தொடரில் மொத்தமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 13 போட்டிகளில் 9 போட்டிகளில் ராகுல் சகார் பங்கேற்றார். இவர் விளையாடிய போட்டிகளில் 4 ஓவர்களை வீசி 30 ரன்களுக்கும் குறைவாகவே ரன்களை அளித்து விளையாடினார். உலகின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீச சிறிதும் பயமில்லாமல் பந்துவீச்சை மேற்கொண்டார் ராகுல் சகார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இவர் சர்வதேச டி20யில் அறிமுகமாக தக்க சமயமாகும். இவர் ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர இந்த டி20 தொடரில் விளையாடாத வீரர் ஸ்ரேயஸ் ஐயர். மூன்றாவது டி20யில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டால் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படுவார்.