இந்திய தேர்வுக்குழு முன்னாள் டி20 சேம்பியனுடான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். நவ்தீப் சைனி முதன் முதலாக ஓடிஐ/டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷீகார் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சகார், புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, தீபக் சகார், கலீல் அகமது.
ஆகஸ்ட் 3 அன்று தொடங்க இருக்கும் இந்த டி20 தொடரானது ஃப்ளோரிடா மற்றும் கயானாவில் நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் டி20 தரவரிசையில் 9வது இடத்தில் இருந்தாலும், மிகவும் வலிமையான டி20 அணி என்பதனை நாம் மறந்திடக் கூடாது. அந்த அணியில் மிகவும் பவர் ஹீட்டர்களான எவின் லிவிஸ், நிக்கலஸ் பூரான், கர்லஸ் பிராத்வெய்ட், ஷீம்ரன் ஹட்மயர் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் கீரன் பொல்லர்ட் மற்றும் சுனில் நரைன் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணியின் கூடுதல் வலிமையாகும்.
அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராக உள்ளது. இதுவரை நிரந்தரமான டி20 வீரர் என யாரையும் இந்திய தேர்வுக்குழு குறிப்பிடவில்லை. இந்த தொடரிலிருந்து இனிவரும் சர்வதேச டி20 தொடர்களில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகிறார்களோ அவர்களே உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெறுவார்கள் என்பதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களும் மிகவும் கவணத்துடன் செயல்பட உள்ளனர்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI பற்றி காண்போம்.
#1 டாப் ஆர்டர் (ரோகித் சர்மா, ஷீகார் தவான், விராட் கோலி)
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் அசத்தி வரும் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் தனித் திறமையுடன் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக ரோகித் சர்மா வலம் வந்தார். அத்துடன் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்ட குறிப்பிட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவராவார்.
எதிர்பாராத விதமாக கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷீகார் தவான். காயத்திலிருந்து குணமடைந்த தவான் மீண்டும் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயராகிவிட்டார். அதிரடி ஆட்டக்காரரான இவர் பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளும் திறன் உடையவர். அத்துடன் இந்திய வலதுகை மற்றும் இடதுகை தொடக்க பேட்டிங் மூலம் எதிரணி பௌலர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் திறன் உடையவர்கள் ரோகித் மற்றும் தவான்.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களம் காண உள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவானுடன் கைகோர்த்து அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தும் திறன் உடையவர் விராட் கோலி. 2019 உலகக்கோப்பை தொடரில் ஏமாற்றம் அளித்த விராட் கோலி முன்னாள் டி20 சேம்பியன்களுடனான இந்த டி20 தொடரில் மீண்டும் தனது கேப்டன்ஷீப் திறனை மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2 ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் க்ருநல் பாண்டியா (மிடில் ஆர்டர்)
ஸ்ரேயஸ் ஐயர் பல மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணியின் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளது. இவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் உடையவர். அத்துடன் சிறப்பான ரன் ஓட்டத்தையும் அளிப்பார். மேலும் சிறப்பான ஃபீல்டிங்கையும் தன்னிடத்தில் இயல்பாகவே கொண்டுள்ளார். இருப்பினும் இதுவரை பெரும்பாலானோரால் குறைவாக மதிப்பிடக் கூடியவராகவே ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்று வகையான இந்திய அணியிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்-ஐ இந்திய தேர்வுக் குழு நியமித்துள்ளது. ரிஷப் பண்ட் ஒரு மிகப்பெரிய பவர் ஹீட்டர். கடைசி 10 ஓவர்களில் இவரை சரியான முறையில் இந்திய அணி பயன்படுத்தும். ரிஷப் பண்ட் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் மிகப்பெரிய ஷாட்களை விளாசும் திறன் படைத்து உள்ளார். அத்துடன் தனது கடின உழைப்பால் சில சிறப்பான ஷாட்களை இக்கட்டான சூழ்நிலையில் விளாசி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தருபவர்.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்துபவர் க்ருநல் பாண்டியா. இதுவே இந்திய தேர்வுக்குழுவை மிகவும் கவர்ந்தது. க்ருநல் பாண்டியா அதிரடி பேட்டிங்கையும், 3 முதல் 4 சிறப்பான ஓவர்களையும் வீசி சில மிகப்பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் உடையவர். இவரது சகோதரர் ஹர்திக் பாண்டியாவைப் போல் க்ருநல் பாண்டியாவும் மிகச்சிறந்த ஃபீல்டர்.
#3 ஆல்-ரவுண்டர்கள் (ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார்)
ரவீந்திர ஜடேஜா தனது அதிரடி ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்க்கு எதிரான அரையிறுதியில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்திறனை கண்டு பலர் வாயடைத்து நின்றனர். இவரது ஃபீல்டிங் எப்பொழுதுமே சிறப்பாக இருக்கும். டி20யில் இவரது பௌலிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனினும், தற்போதைய இந்திய ஆல்-ரவுண்டர் இடத்திற்கு சரியான வீரர் இவர் ஆவார்.
வாஷிங்டன் சுந்தர் வளர்த்து வரும் இளம் ஆல்-ரவுண்டர் ஆவார். டி.என்.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் சமீபத்திய கிரிக்கெட் தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கனவு படிப்படியாக மறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்திய தேர்வுக்குழு மீண்டுமொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இவர் பவர்பிளே ஓவரில் சிறப்பான பௌலிங்கை மேற்கொள்பவர். அத்துடன் கடைநிலையில் சிறந்த பேட்டிங் செய்பவர்.
டெத் ஓவரில் ஜாஸ்பிரிட் பூம்ராவுடன் கைகோர்த்து சிறப்பான பந்துவீச்சை விளாசுபவர் புவனேஸ்வர் குமார். இவர் சரியான நேரத்தில் யார்க்கரை வீசும் திறன் கொண்டவர். அத்துடன் "நக்குள் பௌலிங்கை" சிறப்பாக வீசுவார். இதன்மூலம் பேட்ஸ்மேனின் பேட்டிங் மனநிலையை சிதறடிப்பார்.
#4 பந்துவீச்சாளர்கள் (நவ்தீப் சைனி, கலீல் அகமது)
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர் டெத் ஓவரில் அதிரடியாக வீசுவார். கேப்டன் விராட் கோலி நவ்தீப் சைனி மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளார். தற்போது இந்திய தேர்வுக்குழு கவணம் நவ்தீப் சைனியின் மீது விழுந்து இந்திய அணியில் இடம்பெறச் செய்துள்ளது.
இவர் ஓடிஐ மற்றும் டி20 என இரண்டு அணிகளிலுமே தேர்வாகியுள்ளதால் நவ்தீப் சைனிக்கு தன் மீது பன்மடங்கு நம்பிக்கை அதிகரித்திருக்கும். இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்த இவர் சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.
இந்திய உலகக்கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பை அதிர்ஷ்ட வசமாக கலீல் அகமது இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பௌலர். சில சமயங்களில் தனது பௌலிங்கில் அதிக ரன்களை இவர் அளித்தாலும் அணிக்கு தேவையான விக்கெட்டுகளை வீழ்த்தி தருபவர். வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது இன்-ஸ்விங்கை இவர் மேம்படுத்தினால் கலீல் அகமது ஒரு சிறந்த பௌலர் என்பதில் சந்தேகமில்லை.