வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இன்று முதல் தனது நீண்ட கால அட்டவணையில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் என அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன. அதன்படி, புளோரிடாவில் இன்று நடைபெறும் முதலாவது டி20 போட்டியில் வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் இந்தியா களமிறங்க உள்ளது. 2019 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி விளையாடும் முதலாவது சர்வதேச தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக வெளியேறிய ஷிகர் தவான் தற்போது அணியில் மீண்டும் இணைந்துள்ளார். எனவே, வழக்கம்போல் இந்திய அணி தனது டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் மிகச்சிறந்த கூட்டணியை கொண்டு உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் உள்பட மொத்தம் 648 ரன்களை குவித்து அமர்களப்படுத்தினார். இதன் காரணமாக, இந்திய அணி லீக் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது. இதுவரை சர்வதேச அரங்கில் எண்ணற்ற சாதனைகளை புரிந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பங்கேற்கும் ரோகித் சர்மா பல்வேறு விதமான சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அப்படி முக்கியம்வாய்ந்த 3 சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#3.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக 50+ ரன்கள்:
டி20 போட்டிகளில் உலகின் அபாயகரமான அணிகள் அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்று அசத்தியது. டி20 வடிவில் இந்திய அணிக்கு சரிசம பங்குடன் விளங்குகிறது, வெஸ்ட்இண்டீஸ். இந்த அணிக்கு எதிராக ஐந்து முறை தலா 50+க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை புரிந்துள்ளார், இலங்கையின் திலகரத்னே தில்ஷன். அவருக்கு அடுத்தபடியாக பாபர் அசாம், அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் மன்றோ மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 3 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து இந்த பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர். எனவே, அசுர பார்மில் தொடரும் ரோகித் சர்மா, இன்று தொடங்கும் முதலாவது டி20 போட்டியிலேயே அரைசதம் கடந்து இந்த பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இரண்டு அரை சதங்கள், ஒரு சதம் உட்பட 334 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தினார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 145.85 என்ற வகையில் அபாரமாய் உள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் விளையாடுவதால், அடுத்தடுத்து அரைசதங்களை கடந்து இந்த பட்டியலில் திலகரத்னே தில்ஷனை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பும் ரோஹித் சர்மாவுக்கு உள்ளது.