உலககோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. ப்ரிஸ்டோல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க வீரர்களான கெய்ல் மற்றும் லீவிஸ் களமிறங்கினர்.
.இருவரும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். அதிரடியாக ஆடிய கெய்ல் 36 ரன்களில் இருந்தபோது போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து லீவிஸ் சாய் ஹோப் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். நிதானமாக விளையாடிய லீவிஸ் அரைசதம் விளாசினார். மறுமுனையில் ஹோப் பந்துகளை மைதானத்தை விட்டு பறக்க விட்டார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தனர். லீவிஸ் அரைசதம் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய பிராவோ 25, ஹெட்மேயர் 27, ஹோல்டர் 47 மற்றும் பூரன் 9 ரன்கள் என அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஹோப் சதமடித்து அசத்தினார். அடுத்ததாக களமிறச்கிய ரஸல் ஐபிஎல் போட்டியில் விளையாடியது போலவே வானவேடிக்கை காட்டி 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 49.2 ஓவரில் 421 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 422 என்ற கடின இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி சார்பில் கப்தில் மற்றும் நிக்கோலஸ் துவக்கவீரர்களாக களம் கண்டனர். துவக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர் 2 ரன்னில் உசேன் தாமஸ் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்து களமிறங்கிய அணியின் விக்கெட் கீப்பர் டாம் புலுன்டெல் கேப்டன் வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்து இலக்கை துரத்த துவங்கினர். சிறப்பாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் விளாச மறுமுனையில் டாம் புலுன்டெல் அதிரடியாக ஆடி வந்தார்.
வில்லியம்சன் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற அதனைத் தொடர்ந்து புலுன்டெல் சதமடித்து பின் 106 ரன்களில் ப்ராத்வேட் பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேற இறுதியில் நியூசிலாந்து அணி 47.2 ஓவர் முடிவில் 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ப்ராத்வேட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.