அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனியின் பேட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் பெஸ்ட் பினிஷர் ஆக திகழ்ந்து ஆட்டத்தை முடித்து வைப்பதில் வல்லவராக இருந்தவர் தோனி. ஆனால் தோனியின் பேட்டிங்கின் மீது சில ஆண்டுகளாக பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. தோனி ஒரு விக்கெட் கீப்பராகவும் ஒரு முன்னாள் கேப்டன் என்ற முறையில் மற்ற வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும் இன்றுவரை மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக தோனி பெரும்பாலான ஆட்டங்களில் சொதப்பியிருக்கிறார். அவர் அப்படி சொதப்புவதற்க்கு வேறு காரணங்களும் இருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாவிட்டால் பின்வரிசையில் களமிறங்கும் தோனி நிறைய ப்ரஷரை எதிர்கொள்கிறார்.
அதனாலேயே நிறைய டாட் பந்துகளை ஆடுகிறார்.தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்கும் போது எதிர்பாராதவிதமாக தவறான ஷாட் ஆடி விக்கெட்டை இழக்கிறார்.அதுவும் குறிப்பாக சுழற்பந்துவீச்சில் விக்கெட் டு விக்கெட் வீசக்கூடிய பந்துகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்.
தோனி தனது ஆரம்பகாலக்கட்டத்தில் மிகச்சிறப்பாக விளையாடினார். ஓவருக்கு எத்தனை ரன்கள் தேவைப்பட்டாலும் பதறாமல் எதிர்கொள்வதில் கில்லாடி. ஆனால் இப்போதுள்ள நிலைமை வேறு. ஏற்கனவே தற்போது நடந்து முடிந்த டி20 தொடரில் தோனி நீக்கப்பட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் கடும் விமர்சனம் எழுந்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்திய தேர்வுக்குழுவினரோ அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பருக்காக தான் தோனி நீக்கப்பட்டார் என்றனர். இது எந்த அளவிற்க்கு உண்மை என்பது தெரியவில்லை.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கபில்தேவ் கூறுகையில் தோனியின் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு எனக் கூறினார்.
இப்படிப்பட்ட தன்மீதான விமர்சனங்களை எல்லாம் ஆஸி. ஒருநாள் தொடரில் எப்படி கையாளப்போகிறார் என்பதே பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
ஆசியக்கோப்பை ஒருநாள் தொடரை பொறுத்தவரை, தோனி களமிறங்கிய மூன்று இன்னிங்ஸில் 44 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஆண்டை (2018) பொறுத்தவரை தோனி 20 போட்டிகளில் விளையாடி 13 இன்னிங்ஸில் 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் தோனியின் சராசரி 25.00 மற்றும் ஸ்ட்ரைக்ரேட் 71.43. இது கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.
இது ஒருபுறம் இருக்க அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு நிச்சயம் தோனியின் பங்களிப்பு தேவை என இந்திய முன்னாள் வீரர் ராபின் சிங் கருத்து தெருவித்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய அணியும் விராட் கோலியை சார்ந்தது அல்ல எனவும் கூறி இருக்கிறார்.
மேலும் , ரிஷப் பந்த் அனுபவமற்ற வீரர் அதனால் எல்லாப்போட்டிகளிலும் தன் வாய்ப்பை பயன்படுத்துவார் என சொல்ல முடியாது. ஆனால் தோனி மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இந்திய அணி விராட் கோலியை மட்டுமே நம்பி களமிறங்கக்கூடாது எனவும் கூறினார்.
இந்தியாவின் தேர்வுக்குழு எப்படி செயல்பட போகிறது?, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து தொடர்களில் தோனி தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப்போகிறார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
தோனி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 332 ஆட்டங்களில் விளையாடி 10173 ரன்கள் குவித்துள்ளார். இதில் இந்தியாவில் 124 போட்டிகளில் விளையாடி 4266 ரன்களை குவித்து சராசரியாக 54.00 வைத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜன.12-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.