உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா மே 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் மழை பாதிப்பு காரணமாக இதுவரை 4 போட்டிகள் பாதிக்கப்பட்டு, விளையாட இருந்த இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படுள்ளன. இதனால் உலக கோப்பையில் அரை இறுதி வாய்ப்பை சில அணிகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது உலகக்கோப்பையின் வில்லன் டக்வொர்த் லீவிஸ் என்ற தொகுப்பு.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய தொல்லையாக வளர்ந்து நிற்கின்றது மழை. இதனால் போட்டிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அதை காண விரும்பும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எதிர் அணிகளை கண்டு அஞ்சுகிறார்களோ இல்லையோ மழையைக் கண்டு உலக கோப்பையில் களமிறங்கவுள்ள எல்லா அணிகளுமே அஞ்சுகிறார்கள். ரத்து செய்யப்பட்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையால் ரத்தான போட்டிகள்
பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற இருந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. சவுதாம்டன் இல் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இடையேயான போட்டி 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாட்டிங்காமில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டியும் மழையால் ஒரு பந்து கூட வீசப்பட முடியாத சூழ்நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஐசிசி விதிமுறைகள்
உலக கோப்பை போட்டிகள் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மழை குறித்த விதிகள் ஐசிசி அமைப்பு மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. உலக கோப்பை தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் அந்த போட்டி மீண்டும் மற்றொரு நாள் நடந்த ஐசிசி ஆவணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். 1999 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அந்த போட்டி இரண்டு நாட்களுக்குள் அதே மைதானத்தில் மீண்டும் நடத்த வேண்டும் என்று விதிமுறை இருந்தது. 1999 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தான் இந்த விதிமுறையை கொஞ்சம் மாற்றி அமைத்தது ஐசிசி. அதாவது ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் அடுத்த நாளுக்குள் மீண்டும் அந்த போட்டி நடத்த வேண்டும் என்ற விதிமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மாற்று நாள் முறை தொடரின் கால அளவை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்த ஐசிசி 2002-ல் தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஐசிசி உலக கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளின் வாய்ப்பை மழை கெடுத்து விடுமோ என்ற அச்சத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போதுள்ள முறையை மாற்றி ஐசிசி புதிய நடைமுறையை கொண்டு வந்து ஆட்டம் தடை படாமல் முழுமையான ஆட்டமாக நடைபெற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
டக்வொர்த் லீவிஸ்
இனி வரும் நாட்களில் இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறும் தன்மை கொண்டதால் உலகக் கோப்பை கிரிகெட் தொடரின் பெரும்பாலான ஆட்டங்கள் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி விளையாட வேண்டிய நிலை இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கோடை காலத்தில் அங்கு அடிக்கடி மழை குறிப்பிடும் என்பதால் பெரும்பாலான போட்டிகள் 50 ஓவர்கள் முழுமையாக விளையாட முடியாத காரியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீதோஷ்ண நிலையை நன்கு கணித்து ஆடுவது போட்டியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணிக்கும் நிச்சயம் சவாலாகவே இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகள் படி 50 ஓவர்கள் கொண்ட போட்டி சுறுக்கப்படும் பட்சத்தில் இலக்குகளும், ஓவர்களும் மாற்றி அமைக்கப்படும். இது எந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் கிரிக்கெட் விதிகளில் மாற்றம் செய்யப்படும் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகளை கணித்து ஆட எல்லா அணிகளும் ஆயத்தமாக வேண்டியுள்ளது அவசியமாகியுள்ளது. ஓலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்காததற்கு மழையையும் ஒரு காரணமாக கூறுகின்றனர்.