இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரில் தோனி மற்றும் கோலி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத நிலையிலும் ரோகித் தலைமையில் 3:0 என ஒயிட்வாஷ் செய்தது.! அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியிலும் விராட்கோலி தலைமையில் வென்று தற்போது பலம் வாய்ந்த அணியாக ஆஸிதிரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதே நேரத்தில் ஆஸி. அணிக்கு இது ஒரு மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது.கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் தொடர்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது..
ஒருநாள் போட்டியில் உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அனுபவமற்ற கேப்டன் டீம்பெய்ன் அணியை வழிநடத்துவதும், வார்னர் மற்றும் ஸ்மித் போன்ற வீரர்கள் இல்லாததே ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பால்டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகே ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, புதிய பண்பாட்டை நோக்கி ஆஸ்திரேலிய அணி நடைபோடத் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் அதற்கேற்ப அணி வீரர்களையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வார்னர், ஸ்மித், பேங்கிராப்ட் தடைகளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கடும் பின்னடைவு கண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆரோன் வின்ச் அறிமுக வீரராக களமிறங்கினார். அணியில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டெனிஸ் லில்லி, கிரெக் சாப்பல், விக்கெட் கீப்பர் ராட்னி மார்ஷ் ஓய்வு பெற்ற நிலையில் 1985ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி ஆலன் பார்டர் தலைமையில் கடுமையாக திணறியது. நடுவர் உதவியுடன் தான் தொடரை இழக்காமல் தப்பியது.
ஆனால் இப்போது டிவி அம்பயர், தொலைக்காட்சி, தொழில் நுட்ப காலத்தில் மோசடிகளும் செய்ய முடியாத நிலையில் ஆஸ்திரேலிய அணி கடும் சிக்கலில் உள்ளது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 16வது ஓவரில் 55/3 என்று சரிவடைந்த தென் ஆப்பிரிக்கா அதன் பிறகு டுபிளெசிஸ், மில்லர் சதங்களுடன் சாதனை 252 ரன் கூட்டணியுடன் வெற்றிக்கான 320 ரன்களை எட்டியதால் தொடரை 2-1 என்று வென்றது.
இதில் மிட்செல் ஸ்டார்க் தன் வழக்கத்துக்கு மாறாக ஒரே ஓவரில் 20 ரன்களை கடைசியில் கொடுத்து தன் வாழ்நாளின் மோசமான ஓவரை வீசினார்.கடைசி 5 ஒவர்களில் 75 ரன்களை விளாசியது தென் ஆப்பிரிக்கா. இதில் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டார்க்கின் மிக மோசமான ஓவராகும் இது.
இதுபோன்ற பல மோசமான நிகழ்வுகள் ஆஸி. அணிக்கு அரங்கேறியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை தற்போது அசுர பலத்துடன் இருக்கிறது.
2014 ல் இங்கிலாந்தில் தன்மீதான விமர்சனங்களுக்கு இம்முறை தனது பேட்டிங்கின் மூலம் விராட்கோலி தக்க பதிலடி கொடுத்தார்.அதே போல் கடந்தமுறை அடிலெய்டு டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார் விராட்கோலி. இன்றுவரை என்னால் மறக்க முடியாது என கோலி பல மேடைகளில் கூறியுள்ளார்.
இந்திய அணி டெஸ்ட் போட்டியில் நெ.1 அணியாக இருக்கிறது..இந்திய அணியை எதிர்கொள்வது எளிதான விஷயமாக இருக்காது..
எனினும் இந்திய ஆடுகளத்திற்க்கும் அதன் தன்மைக்கும் முற்றிலும் மாறானது வெளிநாட்டு ஆடுகளங்கள் எனவே இருஅணியும் சமபலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருநாள் போட்டியை பொறுத்தவரை ரோகித்சர்மா மற்றும் விராட்கோலி தனது உச்சக்கட்ட பார்மில் இருக்கின்றனர்.மேலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் சோதிக்கப்படக்கூடும்.தவண், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை.
தொடர்ந்து சோபிக்கத்தவரும் தோனிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்ககூடும் அந்த வகையில் பூம்ரா, புவனேஷ்குமார் மற்றும் கலீல் அஹ்மது மூவரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை குல்தீப் மற்றும் சாஹல் சிறப்பாக வீசுகிறார்கள்.
டி20 போட்டியை பொறுத்தவரை தோனி இல்லாமல் களமிறங்குவது இந்திய அணி சற்று பின்னடைவாகவே இருக்கும்.அதே நேரம் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஏழு டி20 தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற நவ.21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 போட்டியில் களம் காண உள்ளது இந்தியா.