கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு ராஜ்யத்தை அமைத்துள்ள ஒரு அணி தான் ஆஸ்திரேலியா. அதிலும் குறிப்பாக உலக கோப்பை தொடர்களில் இவர்களது ஆட்டம் இன்னும் ஆக்ரோஷமாக, அதி அற்புதமாக அமையும். தொடர்ந்து 3 உலகக் கோப்பைகளை வென்ற அணி, உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை ருசித்த அணி என்று பல்வேறு சாதனைகளை ஆஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது.
ஆனால் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக அணியின் முன்னணி வீரர்களான 'ஸ்டீவ் ஸ்மித்' மற்றும் 'டேவிட் வார்னர்' ஆகியோருக்கு ஆஸி கிரிக்கெட் வாரியம் 1 ஆண்டு தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வீரர்கள் அனைவரும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தனர்.
இந்த வருட உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்வது நிச்சயம் சாத்தியமில்லை என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கருதியிருந்தனர். ஆனால் உலக கோப்பை தொடர் என்றாலே எழுச்சி பெறும் ஆஸி அணி இந்த முறையும் அதை மிகச் சிறப்பாக செய்து காட்டியது.
இளம் அணியாக 'ஆரோன் பின்ச்' தலைமையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வலுவான இந்திய அணியை 3-2 என்ற நிலையில் ஒருநாள் தொடரை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது ஆஸ்திரேலியா. அதே உத்வேகத்துடன் அடுத்த நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை முழுமையாக 5-0 என்று வென்று உலகக் கோப்பை போட்டிக்கு தன் வருகையை தெரியப்படுத்தியது ஆஸி.
இந்த உலகக் கோப்பை தொடரிலும் 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மொத்தம் 10 புள்ளிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது ஆஸ்திரேலியா. சில மாதங்களுக்கு முன்பு வரை மோசமான நிலைமையில் இருந்த ஆஸி அணிக்கு எப்படி இது சாத்தியமானது?.
சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் தொடக்க நிலை பேட்ஸ்மேன்கள்.
இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அசத்தலான ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் பின்ச் மற்றும் வார்னர் மெதுவாக ஆட்டத்தை நிலைப்படுத்தி அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு அணியின் ஸ்கோர் பெருமளவு உயர செய்கின்றனர்.
இது பின்வரிசை வீரர்கள் (குறிப்பாக மேக்ஸ்வெல்) கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக அமைகிறது.
ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சு.
கடந்த 2015 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகனாக விளங்கிய 'மிட்செல் ஸ்டார்க்' இந்த முறையும் தனது அசத்தலான பந்துவீச்சால் எதிரணி வீரர்களை மிரட்டி வருகிறார். காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெற்ற தொடர்களில் பங்கேற்காமல் இருந்த ஸ்டார்க் இந்த உலக கோப்பை தொடரில் தனது முழு பலத்துடன் மீண்டு வந்துள்ளார்.
இவருக்கு பக்கபலமாக சிறப்பான வேகத்துடனும் துல்லியத்துடனும் பந்து வீசி வருகிறார் 'பேட் கம்மின்ஸ்'. இந்த உலக கோப்பை தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ள ஸ்டார்க் மற்றும் கம்மினஸ் ஜோடி எதிர் அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இறுதிவரை போராடும் குணம்.
இது ஆஸ்திரேலிய அணிக்கு உரித்தான ஒரு தனிப்பட்ட தன்மை என்றே கூறலாம். இந்த உலகக் கோப்பை தொடரிலும் இதனை காண முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸி பந்துவீச்சாளர்களின் போராட்ட குணத்தாலேயே வெற்றி சாத்தியமானது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான நிலையில் இருந்து மீண்டெழுந்து வெற்றியை வசப்படுத்தியது ஆஸி.
வலுவான ஒரு அணியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலக கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.