இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் நடப்பு டி-20 உலக சாம்பியனாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. யாருமே எதிர்பாரா வண்ணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் இந்த போட்டியில் அமைந்தது.
‘செயின்ட் கிட்ஸ்’ மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று விடியற் காலை 01:30 மணியளவில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவு சரிதான் என்பதை நிரூபிப்பது போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆரம்பகட்ட பந்துவீச்சு அமைந்தது.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேரிஸ்டோவ் 12 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 8 ரன்களிலும், கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5.2 ஓவர்களில் 32 ரன்களுக்க் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறியது. இந்த நிலையில் ஜோ ரூட்டுடன் சாம் பில்லிங்ஸ் இணைந்தார். இந்த ஜோடி விக்கெட் சரிவை பற்றி கவலைப்படாமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்நிலையில் அரைசதத்தை கடந்த ஜோ ரூட் 55 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சாம் பில்லிங்ஸ் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தொடர்ந்து நொறுக்கி தள்ளினார்.
ஒபைடு மெக்கோய் வீசிய கடைசி ஓவரில் 22 ரன்களை விளாசிய பில்லிங்ஸ் இறுதியில் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அட்டகாசமாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் 47 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 183 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. ஆனால் தங்களின் பேட்டிங் இந்த அளவுக்கு மோசமாக அமையும் என்று அவர்களே எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 5 ரன்களிலும், ஷாய் ஹோப் 7 ரன்களிலும் டேவிட் வில்லி பந்துவீச்சில் உடனே ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வருவதும் போவதுமாக ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்தினர். குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் வேகப் பந்தில் அனல் பறந்தது. வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் ஹெட்மையர் மற்றும் பிராத்வெயிட் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர்.
முடிவில் 11.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சர்வதேச டி-20 போட்டிகளில் இரண்டாவது மோசமான ஸ்கோராக இது பதிவானது. இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 39 ரன்களில் ஆல்-அவுட் ஆனது குறைந்த ஸ்கோராக உள்ளது. ஆனால் டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அணிகளில் மோசமான ஸ்கோராக தற்போதைய போட்டி அமைந்துள்ளது.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி வருகிற 11-ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.