இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்று உலக டெஸ்ட் சேம்பியன் ஷீப்பை புள்ளிகளுடன் தொடங்கியுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 (இன்று) அன்று ஜமைக்காவில் நடைபெற உள்ளது.
முதல் டெஸ்டில் இந்திய அணியின் ஆடும் XI தேர்வு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆடும் XIல் இடம்பெறாததால் பல்வேறு விமர்சனங்கள் கசியத் தொடங்கியது. முதல் டெஸ்டில் ஆடும் XIல் இடம்பெற்ற வீரர்களை விட அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். அத்துடன் தங்களது திறமையை திறம்பட நிருபித்துள்ளனர்.
பேட்டிங்கில் அஜீன்க்யா ரகானே இரு டெஸ்ட் இன்னிங்ஸிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியில் தான் ஒரு முக்கிய வீரர் என்பதை நிருபித்துள்ளார். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் ரகானே வென்றது குறிப்பிடத்தக்கது. ஹனுமா விகாரியும் இரு இன்னிங்ஸிலும் ஒரு முக்கிய பங்களிப்பினை இந்திய அணிக்கு அளித்தார்.
விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் அருமையான தொடக்கத்தை அளித்தாலும் அதனை பயன்படுத்தி பெரும் ரன்களை குவிக்க தவறுகின்றனர். மயான்க் அகர்வால் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் முதல் டெஸ்டில் ரன் குவிப்பில் ஈடுபட தடுமாறினர். இவர்கள் இரண்டாவது டெஸ்டில் தங்களது இயல்பான ஆட்டத்திற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பௌலர்களான ஜாஸ்பிரிட் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களாக வலம் வருகிறார்கள். இந்த பௌலிங் படை மேற்கிந்தியத் தீவுகளின் பேட்ஸ்மேன்களை முதல் டெஸ்டில் அருமையாக மடக்கியது.
இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாஸ்பிரிட் பூம்ரா இருவரும் 5 விக்கெட்டுகளை தலா ஒவ்வொரு முறை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா இவர்களுக்கு சரியாக ஆதரவளித்து விளையாடினர்.
ஜமைக்கா ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகுவும் ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்திய அணி நிர்வாகம் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை ஆடும் XIல் சேர்க்கும். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளராக களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குல்தீப் யாதவும் அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் அஸ்வினுக்கு சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் உள்ள காரணத்தால் பெரும்பாலும் அஸ்வினை தேர்ந்தெடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
அணி நிர்வாகம் ராகுல் மற்றும் மயான்க் அகர்வாலை தொடக்க ஆட்டக்காரர்களாக தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் களம் காண வைக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக முதல் டெஸ்டில் அசத்தியதால் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்டில் இடம்பெற வாய்ப்புகள் மிகக் குறைவு.
எனவே மேற்கூறிய காரணிகளை வைத்து பார்க்கும் போது இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே நிகழும். இந்திய அணி நிர்வாகம் இரண்டாவது டெஸ்டிற்கு மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் வேண்டுமென நினைத்தால் முகமது ஷமி-க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார்.
உத்தேச இந்திய ஆடும் XI:
கே எல் ராகுல், மயான்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஆஜீன்க்யா ரகானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹனுமா விகாரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரிட் பூம்ரா.