சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) வெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தான் ( 1992 ஆம் ஆண்டு )
பாகிஸ்தான் – 220/2 ( 50 ஓவர்கள் )
வெஸ்ட் இண்டீஸ் – 221/0 ( 46.5/50 ஓவர்கள் )
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரமீஸ் ராசா மற்றும் ஆமர் சோஹைல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சோஹைல் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய மியாண்டாட், 57 ரன்கள் விளாசினார். இறுதி வரை நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய ராசா, 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்தது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஹெய்ன்ஸ் மற்றும் பிரைன் லாரா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே மிகச் சிறப்பாக விளையாடி, 46 ஓவர்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிபெறச் செய்தனர். ஹெய்ன்ஸ் 93 ரன்களும், பிரைன் லாரா 88 ரன்களும் விளாசினார்.
#2) கென்யா Vs தென் ஆப்பிரிக்கா ( 2003 ஆம் ஆண்டு )
கென்யா – 140/10 ( 38/50 ஓவர்கள் )
தென் ஆப்பிரிக்கா – 142/0 ( 21.2/50 ஓவர்கள் )
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கென்யா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய ரவி ஷா, 60 ரன்கள் விளாசினார். இவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அனைவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் கென்யா அணி 38 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.
141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. கிப்ஸ் மற்றும் கிறிஸ்டன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அதிரடியாக விளையாடி 22 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றிபெறச் செய்தனர். கிறிஸ்டன் 52 ரன்களும், கிப்ஸ் 87 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.