சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) இந்தியா Vs கிழக்கு ஆப்பிரிக்கா ( 1975 ஆம் ஆண்டு )
கிழக்கு ஆப்பிரிக்கா – 120/10 ( 55.3/60 ஓவர்கள் )
இந்தியா – 123/0 ( 29.5/60 ஓவர்கள் )
1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் கிழக்கு ஆப்பிரிக்கா அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. வாலுசிம்பி மற்றும் பிராசட் அலி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடிய ஜவாஹிர் ஷா, 34 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பரோக் இன்ஜினியர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். இறுதியில் இந்திய அணி 30 ஓவர்களில் இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பரோக் இன்ஜினியர் 54 ரன்களும், சுனில் கவாஸ்கர் 64 ரன்களும், எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
#2) ஜிம்பாப்வே Vs வெஸ்ட் இண்டீஸ் ( 1983 ஆம் ஆண்டு )
ஜிம்பாப்வே – 171/10 ( 60 ஓவர்கள் )
வெஸ்ட் இண்டீஸ் – 172/0 ( 45.1/60 ஓவர்கள் )
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. பேடர்சன் மற்றும் பிரவுன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஹீரோன் டக் அவுட்டாகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கெவின் கரன், 62 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாட தவறினர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 60 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டெஸ்மாண்ட் ஹெய்நெஸ் மற்றும் பவுட் பாச்சுஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி 45 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர். டெஸ்மாண்ட் ஹெய்நெஸ் 88 ரன்களும், பவுட் பாச்சுஸ் 80 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.