சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டில் உலக கோப்பை தொடர் ஆனது, இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த உலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) பங்களாதேஷ் Vs ஆஸ்திரேலியா ( 2007 ஆம் ஆண்டு )
பங்களாதேஷ் – 104/6 ( 22 ஓவர்கள் )
ஆஸ்திரேலியா – 106/0 ( 13.5/22 ஓவர்கள் )
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், பங்களாதேஷ் அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ததால், போட்டி 22 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங் செய்தது. தமீம் இக்பால் மற்றும் நபீஸ் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இவர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து நிதானமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன், 25 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடிய மொர்டசா, 17 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 22 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்தது.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஹைடன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக விளையாடியதால், ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி விட்டது. ஆடம் கில்கிறிஸ்ட் 59 ரன்களும், ஹைடன் 47 ரன்களும் அடித்தார்.
#2) கென்யா Vs நியூசிலாந்து ( 2011 ஆம் ஆண்டு )
கென்யா – 69/10 ( 23.5/50 ஓவர்கள் )
நியூசிலாந்து – 72/0 ( 8/50 ஓவர்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், கென்யா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் கென்யா அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரன் வாட்டர்ஸ் மற்றும் ஒபான்டா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஒபுயா, 14 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் கென்யா அணி, 23 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 69 ரன்கள் மட்டுமே அடித்தது.
70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடியதால், 8 ஓவர்களில் நியூசிலாந்து அணியில் எளிதில் வெற்றி பெற்று விட்டது. மார்ட்டின் கப்தில் 39 ரன்களும், பிரண்டன் மெக்கலம் 26 ரன்களும் அடித்தார்.