சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலக கோப்பை தொடர் ஆனது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) ஜிம்பாப்வே Vs நியூசிலாந்து ( 2011 ஆம் ஆண்டு )
ஜிம்பாப்வே – 162/10 ( 46.2/50 ஓவர்கள் )
நியூசிலாந்து – 166/0 ( 33.3/50 ஓவர்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், ஜிம்பாப்வே அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டெய்லர் மற்றும் கவென்ட்ரி ஆகிய இருவரும் களம் இறங்கினர். கவென்ட்ரி முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த டைபு, வெறும் 8 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய டெய்லர், 44 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 46 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 162 ரன்கள் மட்டுமே அடித்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. பிரண்டன் மெக்கலம் மற்றும் மார்டின் கப்தில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடி, நியூசிலாந்து அணியை 36 ஓவர்களில் வெற்றி பெறச் செய்தனர். பிரண்டன் மெக்கலம் 76 ரன்களும், மார்ட்டின் கப்தில் 86 ரன்களும் விளாசினார்.
#2) மேற்கிந்திய தீவுகள் Vs பாகிஸ்தான் ( 2011 ஆம் ஆண்டு )
மேற்கிந்திய தீவுகள் – 112/10 ( 43.3/50 ஓவர்கள் )
பாகிஸ்தான் – 113/0 ( 20.5/50 ஓவர்கள் )
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் கால் இறுதி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும், பாகிஸ்தான் அணியும், மோதியது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் கெயில் மற்றும் டுவைன் ஸ்மித் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த சர்வான், சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 24 ரன்கள் அடித்தார்.
மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய சந்தர்பால், 44 ரன்கள் அடித்தார். இவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முகமது ஹபீஸ் மற்றும் கமரன் அக்மல் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடி, பாகிஸ்தான் அணியை 20 ஓவர்களில் வெற்றிபெறச் செய்தனர். கமரன் அக்மல் 47 ரன்களும், முகமது ஹபீஸ் 61 ரன்களும் அடித்தார்.
Published 30 May 2019, 13:15 IST