ஐபிஎல் தொடரில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியும், கடைசி பந்து வரை விறுவிறுப்பாகவும், அதிரடிக்கு பஞ்சம் இல்லாமலும் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சில போட்டிகளில் ஐபிஎல் தொடரில் நடந்துள்ளது. அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் ( 2008 ஆம் ஆண்டு )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 189/4 ( 20 ஓவர்கள் )
மும்பை இந்தியன்ஸ் – 188/10 ( 20 ஓவர்கள் )
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷான் மார்ஷ், அதிரடியாக விளையாடினார். அவர் 56 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹோப்ஸ், முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த பஞ்சாப் அணியின் கேப்டன், யுவராஜ் சிங் வெறும் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் பஞ்சாப் அணி, 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சிறப்பாக விளையாடி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சச்சின் டெண்டுல்கர் 46 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த டுவைன் ஸ்மித், 16 பந்துகளில் 20 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார்.
சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய அபிஷேக் நாயரும் 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி பந்தை வீசிய யுவராஜ் சிங் ஓவரில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது பத்தாவது விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
#2) கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டெக்கான் சார்ஜர்ஸ் ( 2009ம் ஆண்டு )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 134/7 ( 20 ஓவர்கள் )
டெக்கான் சார்ஜர்ஸ் – 133/8 ( 20 ஓவர்கள் )
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி சார்பில் குமார் சங்கக்காரா 43 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங், 20 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில், பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெக்கான் சார்ஜர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் ஹிப்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு சராசரியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 26 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும், அடங்கும். இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி வெற்றி பெற, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த ரியான் ஹரிஸ், 2 ரன்கள் மட்டுமே அடித்தார். எனவே பஞ்சாப் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.