சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் விறுவிறுப்பான தொடர் ஒன்று இருக்கிறது என்றால் அது உலக கோப்பை தொடர் தான். காரணம் அந்த உலக கோப்பை தொடரில் தான் அனைத்து நாடுகளும் பங்கேற்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை தொடரானது கடைசியாக கடந்த 2015ஆம் வருடம் நடத்தப்பட்டது. தற்போது 4 ஆண்டுகள் கழித்து இந்த 2019 ஆம் வருடத்தின் மே மாதத்தில் இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. எனவே இந்த உலக கோப்பை தொடருக்கான அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த உலக கோப்பை தொடரில் அதிக சராசரியை வைத்துள்ள பேட்ஸ்மேன்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#4) யுவராஜ் சிங்
இந்த பட்டியலில் நமது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக சரியாக விளையாடவில்லை. எனவே தொடர்ந்து இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். ஆனால் இந்தியா கடைசியாக 2011 ஆம் வருடம் உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உலக கோப்பை தொடரில் இதுவரை 21 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 738 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.71 ஆகும். இந்த 21 உலக கோப்பை போட்டிகளில் ஒரு சதமும், ஏழு அரைச் சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) டூ பிளசிஸ்
இவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஆவார். 2011 மற்றும் 2015 ஆகிய இரு உலக கோப்பை போட்டியில் 14 ஆட்டங்களில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் 539 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் இவருடைய பேட்டிங் சராசரி 53.9 ஆகும். இவர் உலக கோப்பை போட்டிகளில் 1 சதமும் 4 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 2015 உலக கோப்பை போட்டியில் ஐயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 109 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ஸ்டீவன் ஸ்மித்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட முடியாமல் இருக்கிறார். அதற்கு காரணம் கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் செய்த சிறு தவறினால் தான் தற்போது தன் தாய் நாட்டிற்காக விளையாட முடியாமல் இருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித்.
2011 மற்றும் 2015 ஆகிய இரு உலக கோப்பை போட்டிகளில் மொத்தமாக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 455 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் இவரின் பேட்டிங் சராசரி 56.88 ஆகும். இவர் உலக கோப்பை போட்டிகளில் 1 சதமும் 4 அரை சதமும் அடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1) மார்டின் குப்தில்
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில். . 2011 மற்றும் 2015 உலக கோப்பை போட்டிகளில் 17 ஆட்டங்களில் ஆடியுள்ள மார்டின் குப்தில் 809 ரன்கள் குவித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 57.79 ஆகும். இதில் 2 சதங்களும் 3 அரை சதங்களும் அடங்கும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரட்டைச் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.