2019 உலகக் கோப்பை தொடரின் முதலாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. உலக கோப்பை தொடர் துவங்கும் முன்னரே, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் நான்கு சிறந்த அணிகளை அவ்வப்போது அறிவித்துக் கொண்டு இருந்தனர். அந்த வகையில் பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என கூறியுள்ளனர். இருப்பினும், தொடரில் எந்நேரத்தில் ஆச்சர்யம் அளித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறக்கூடிய இரு அணிகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பாகிஸ்தான் (1992 சாம்பியன்):
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் பாகிஸ்தான் அணி தத்தளித்தது. இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தக்கவாறு தங்களை தயார்ப்படுத்தி உள்ளது. இந்த அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ரன்களை இந்த அணி குவித்துள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான், பாபர் அஸாம் ஆகியோரும் ரன்களைக் குவித்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அணியின் மிகப்பெரிய கவலை பவுலிங் கூட்டணி தான். பேட்டிங்கில் 350 ரன்கள் குவித்து இருந்தபோதிலும் எதிரணியினர் சேசிங் செய்கையில் அவர்களை தடுத்து நிறுத்த ஒரு சிறப்பான பந்து வீச்சு இதுவரை அமையவில்லை. அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள முகமது அமீர் மற்றும் வகாப் ரியாஸ் ஆகியோர் தங்களது அனுபவத்தை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்காத வகையில் விளையாடக்கூடிய பாகிஸ்தான் அணி, கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று ஆச்சர்யமளித்தது. எனவே, இம்முறை உலகக் கோப்பை தொடரிலும் இந்த அணி எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியம் அளிக்கலாம்.
#2.வெஸ்ட் இண்டீஸ் (1975 & 1979 சாம்பியன்):
இருமுறை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு ஆயத்தபணிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முறை உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி அதிக ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரணடாவது பயிற்சி ஆட்டத்தில் 421 ரன்களை குவித்து ஆச்சரியம் அளித்திருந்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி. உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை கூட திறம்பட சமாளித்து அதிரடியாக ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, லீக் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த தொடரில் கிறிஸ் கெய்ல் 4 போட்டிகளில் விளையாடி இரு சதங்கள் உட்பட மொத்தம் 424 ரன்களை குவித்திருந்தார். இவர் மட்டுமல்லாது, அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களான இவன் லீவிஸ், சாய் ஹோப், ஹெட்மேயர், ரசல், பிராத்வெய்ட் மற்றும் கேப்டன் ஹோல்டரின் பேட்டிங் ஒருங்கிணைந்து செயல்பட்டால் 500 ரன்களை கூட ஒரே இன்னிங்சில் இந்த அணி கடந்து சாதனை படைக்கலாம்.