ஆஸ்திரேலிய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான வெற்றியை பெற்றது. ஆனால் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. கடந்த ஞாயிறு அன்று இந்திய-ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தனது 6வது உலகக் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி முதல் 3 போட்டிகளில் விளையாடியதை வைத்து பார்க்கும் போது இது எளிதான காரியமாக அந்த அணிக்கு தெரியவில்லை.
ஆஸ்திரேலிய அணி தற்போது வரை தாளில் மிகப்பெரிய அணியாக உள்ளது. ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் வருகையால் ஆஸ்திரேலிய அணி வலிமையுடன் திகழ்கிறது. இருப்பினும் பந்துவீச்சாளர்கள் உலகக் கோப்பையை வெல்லும் அளவிற்கு பந்துவீச்சை தற்போது வரை மேற்கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கமின்ஸை தவிர வேறு யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆஸ்திரேலிய அணியை மேம்படுத்த அந்த அணி மேற்கொள்ள வாய்ப்புள்ள 3 மாற்றங்கள் பற்றி காண்போம்.
#1 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய பௌலிங் பெரும் கவலையை அந்த அணிக்கு அளித்து வந்தது. இதனால் சில மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கமின்ஸ் ஆட்டத்தின் தொடக்க மற்றும் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசுகின்றனர். ஆனால் மற்ற பௌலர்கள் தங்களது பணியை செய்ய தவறுகின்றனர்.
நெதன் குல்டர் நில் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தங்களது பௌலிங்கில் அதிக ரன்களை அளித்து வருகின்றனர். அத்துடன் ஆஸ்திரேலிய அணியில் தங்களது இடத்தை நிரந்தரமாக்க தயங்குகின்றனர்.
நெதன் குல்டர் நைல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 92 ரன்களை விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இவர் ஆஸ்திரேலிய அணியின் ஒரு முக்கிய பௌலர் என்பதை நாம் மறந்திடக் கூடாது. பௌலிங்கில் மோசமாக வீசி பேட்டிங்கில் சிறப்பாக இருந்து எந்த வித பயனும் இல்லை. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிக ஷார்ட் பந்துகளை நெதன் குல்டர் நைல் வீசினார். அப்போட்டியில் இவர் வீசிய 10 ஓவர்களில் 63 ரன்களை பௌலிங்கில் அளித்தார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 7 ஓவர்களை வீசி 62 ரன்களை அளித்தார். அத்துடன் பலமுறை மோசமான பௌலிங் செய்துள்ளார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இவரது ஓவர் அதிகப்படியான நெருக்கடியை அளிக்கும் வகையில் இல்லை. எனவே அஸ்திரேலிய அணி கானே ரிச்சர்ட்சன் மற்றும் ஜெஸன் பெஹாரன்ஆஃபை 3வது மற்றும் 4வது பௌலர்களாக அணியில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இந்த முடிவே ஆஸ்திரேலிய அணியின் பௌலிங்கை வலிமையாக்கும். அத்துடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் சற்று நெருக்கடியில்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
#2 ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக நாதன் லன்
ஆஸ்திரேலிய அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள நாதன் லன் ஒரு சிறந்த அனுபவ சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் வழக்கமான வீரராக இல்லை. மொத்தமாக 25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். இவர் உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தும், ஆடம் ஜாம்பாவிற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சை கடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர்.
இவர் வீசிய 6 ஓவர்களிலே 50 ரன்களை அளித்தார். அத்துடன் இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை இவரால் சமாளிக்க முடியவில்லை. ஆடம் ஜாம்பா ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இடம்பெற முக்கிய காரணம் அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிபடுத்தியதுதான்.
ஆடம் ஜாம்பாவின் சுழற்பந்து அதிகம் சுழலாமல், "கூக்லி" மற்றும் "ஃபிலிப்பர்" பந்துவீச்சாகவே வீசுகிறார். அத்துடன் அதிகம் ஷார்ட பிட்சாக வீசுவதால் பந்து அதிகம் மேல் எழும்பும் விதத்திலும் இல்லை. துணைக் கண்டத்தில் ஆடம் ஜாம்பாவின் பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளும் திறமை கொண்ட பேட்ஸ்மேன்களுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் ஆடம் ஜாம்பா பந்துவீச்சு அமைகிறது.
ஆடம் ஜாம்பாவை விட, நாதன் லயன் ஒரு சிறந்த அனுபவ சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு நல்ல பேட்ஸ்மேனும் கூட. ஜீன் 12 அன்று நடைபெற உள்ள பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் நாதன் லயன் களமிறங்க வாய்ப்புள்ளது.
#3 கடைநிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களின் பேட்டிங் வரிசையை முன்படுத்துதல்
கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்திய-ஆஸ்திரேலிய போட்டியில் இந்தியா அடித்த அதிக ரன் இலக்கை அடைய ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் என யாரும் இல்லை. இருப்பினும் நெதன் குல்டர் நைல் அல்லது மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற பேட்ஸ்மேன்களை நல்ல ரன் ரேட் இருக்கும் போதே களமிறக்கியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ரன்களை குவிப்பதில் வல்லவர்கள். இருப்பினும் ஒரு பெரிய இலக்கை சேஸ் செய்யும் போது டாப் ஆர்டரில் தொடக்க ஆட்டக்காரர்களைப் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என ஆஸ்திரேலிய அணியில் யாரும் இல்லை.
ஸ்டிவன் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா நுணுக்கமான ஆட்டத்தினை கையாளும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள் அதனால் அவர்களது ஆட்டம் அதிரடியாக இருக்காது. க்ளன் மேக்ஸ்வெல் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உள்ளார். ஆனால் அவர் 5வது பேட்ஸ்மேனாக களம் காணுகிறார். இது அவருக்கு தகுந்த பேட்டிங் வரிசை அல்ல.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். இவரது நிலையான அதிரடி ஆட்டத்தை மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலிய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதே போல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கு எதிராகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பேட்டிங்கையும் சரியான இடத்தில் பயன்படுத்த ஆஸ்திரேலியா தவறுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக சில மாற்றங்கள் தற்போது தேவைப் படுகிறது.