2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக மே 22 அன்றே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு உள்ள ஆடுகள தன்மைக்கு ஏற்ப தங்களை முழுமையாக தயார் செய்து கொண்டு வருகிறது.
இந்திய அணி ஏற்கனவே இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று உள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இருப்பினும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பு என்பது இல்லை. தனியாக ஒன்று அல்லது இரண்டு வீரர்களின் ஆட்டத்தின் மூலமே இந்தியா பயிற்சி ஆட்டத்தில் கரையேறியது. இதன்மூலம் இந்திய அணி மீது வைத்திருந்த நம்பிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்ததுள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், நீண்ட காலமாக யுவராஜ் சிங்-ற்கு பிறகு நம்பர்4 பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுலின் நம்பர்-4 பேட்டிங் சிறப்பாக இருந்தது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடிய அதே ஆட்டத்திறனை பயிற்சி ஆட்டத்திலும் வெளிபடுத்தினார். பூம்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சு மற்றும், இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களின் மிரட்டும் சுழல் ஆகியன பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு சில இடங்களில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதனை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஆட்டத்திற்குப் முன்பாக இந்திய அணி நிர்வாகம் களைய வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாம் இங்கு இந்திய அணியில் உள்ள 3 முக்கிய கவலை அளிக்கு இடங்களை காண்போம்:
#1 வேதனையளிக்கும் தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்து வந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கே இப்பெருமை சென்றடையும். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் நம்பர்-3 பேட்ஸ்மேன் விராட் கோலி.
ஆனால் தற்போது கடந்த சில போட்டிகளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் மிகவும் மோசமடைந்து உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் மோசமாக விளையாடினர். மொகாலியில் நடந்த ஒரு போட்டியில் மட்டும் சற்று சிறப்பாக இருந்தது. இருப்பினும் அந்த போட்டி தோல்வியிலேயே முடிந்தது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. இரு போட்டிகளிலுமே ஆட்டத்தின் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இவர்களின் மோசமான ஆட்டத்தினால் இந்திய அணியின் ரன் குவிப்பும் மங்கும். இது உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலையாகும்.
ரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சற்று நிலைத்து விளையாட முயன்றார். ஆனால் அவர் மோசமான ஷாட் தேர்வை கையாண்டதால் நிலைத்து விளையாட இயலவில்லை. ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்திலும், சாதரண மைதானத்திலும் ஷீகார் தவான் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் மீது வைத்திருந்த நம்பிக்கையை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இருவருமே ஆட்டத்திறனை இழந்து தவித்து வருவது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான கவலையாகும்.