கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த 12வது உலக கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவு பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதன்படி நடைபெற்ற நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் சந்தித்தன. அவற்றில் தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து முதல்முறையாக மகுடம் சூடியது.
நாக்அவுட் சுற்றுக்கு முன்னர் நடைபெற்ற லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியை தவிர மற்ற அணிகளின் செயல்பாடும் ஓரளவுக்கு திருப்தி அளித்தது. ஏனெனில் ஆஃப்கானிஸ்தான் மட்டுமே ஒரு வெற்றியை கூட பெற இயலவில்லை. இருப்பினும், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்களில் சிலர் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். அவ்வாறு இந்த உலக கோப்பை தொடரில் மிகச்சிறந்த தேடலாக அமைந்த சில வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் எடுத்துரைக்கின்றது.
#3.அவிஷ்கா பெர்னாண்டோ:
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி பலம் மிகுந்த இங்கிலாந்தை தோற்கடித்து சாதனை படைத்தது. இந்த அணியின் பெரிதும் அனுபவம் இல்லாத வீரரான பெர்னாண்டோ அற்புதமான சில ஷாட்களை திரும்பத் திரும்ப அடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான சோப்ரா ஆர்ச்சரின் பந்தில் சிக்ஸர் அடித்து மலைக்க வைத்தார். சிறிதும் சிரமப்படாமல் லாவகமாக சிக்சரை அடித்துள்ளார், பெர்னாண்டோ. தொடரில் 4 இன்னிங்சில் களம் இறங்கி 50.75 என்ற பேட்டிங் சராசரி உடன் 203 ரன்களை இவர் குவித்துள்ளார். இது மட்டுமல்லாது, 105.73 என்ற வகையில் இவரது ஸ்ட்ரைக்-ரேட் சிறப்பாக அமைந்தது. தொடரின் முற்பாதியில் பெரும்பாலான போட்டிகளில் ஏன் இவர் ஆடும் லெவனில் களமிறக்கப்படவில்லை என பல்வேறு ரசிகர்களும் இலங்கை அணியை கேள்வி எழுப்பினர். அதன் பின்னர், களமிறக்கப்பட்டபோது அற்புதமாக சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அதிவேகமான பவுலர்களின் பந்துவீச்சை கூட இயல்பாக கையாண்டு ரன்களை குவித்தார். மேலும், 12வது உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் மிகச்சிறந்த தேடலாக இவர் அமைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#2.ஷாகின் அப்ரிடி:
பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வயது வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி 12வது உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 16 விக்கெட்களை குவித்து எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார். முகமது அமீருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் இவரே. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் ஹசன் அலிக்கு மிகச் சிறந்த ஒரு மாற்றாக இவர் அமைந்தார். வெறும் 19 வயதே ஆன இவர், நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அனுபவமிக்க பேட்ஸ்மேங்களான காலின் முன்றோ,டாம் லதாம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் கைப்பற்றி சாதனை புரிந்தார். அதேபோல் ,ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 47 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதற்கடுத்து நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்தா.ர் தொடரின் பெரும்பாலான போட்டிகளில் இவர் களமிறக்கப்பட்டு இருந்தால் மிச்செல் ஸ்டார்க்கிற்கு இணையாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இணைந்து இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#1.அலெக்ஸ் கேரி:
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமிகுந்த முறையில் இந்த உலக கோப்பை தொடரிலும் அமைந்தது. இருப்பினும், அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். எட்டு இன்னிங்சில் களமிறங்கிய இவர் 375 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன்கள் குவித்த நான்காவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களுக்கான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளைன் மேக்ஸ்வெல் போன்ற 4 வீரர்களின் விக்கெட்களை விரைவிலேயே இழந்து ஆஸ்திரேலிய அணி தவித்த வேளையில், தனது பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்தார். அரையிறுதிப் போட்டியில் கூட சோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து இவரின் தலையை பதம் பார்த்த போதும் 46 ரன்களை குவித்தது மிகவும் பாராட்டுக்குரியது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 89வது இடத்தில் இருந்த இவர், தொடர் முடிந்த பின்பு 32வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். எனவே, உலகக்கோப்பை தொடரில் இவரை விட மிகச்சிறந்த தேடல் நிச்சயமாக எவரும் இல்லை. "கிரிக்கெட் கடவுள்" என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கூட இவரின் பங்களிப்பை கண்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.