உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான "உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா" இம்முறை இங்கிலாந்து மண்ணில் நடைபெற உள்ளது. முதலாவது சுற்றில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் மோத வேண்டும். இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடம் வகிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தொடரை வெல்லும் அணிகளாக கணிக்கப்படுகின்றன. இந்திய அணியின் விராத் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் இம்முறை உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடவிட்டால் அணியில் இருந்து கழற்றி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான மூன்று இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.தினேஷ் கார்த்திக்:
கிரிக்கெட் உலகின் அதிர்ஷ்டமில்லாத வீரர்களில் ஒருவர், தினேஷ் கார்த்திக். கடந்த சில ஆண்டுகளாக இவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் இவரை விட சிறப்பாக விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வரும் தோனி அணியில் உள்ளமையால், இவருக்கு பெரும்பாலான வாய்ப்புகள் வந்தபாடில்லை. உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார், தினேஷ் கார்த்திக். மேலும், இவர் அணியின் மாற்று விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளார். உலக கோப்பை தொடருக்கான அணியில் இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என்று நம்பிய நிலையில், அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் இம்முறை உலக கோப்பை தொடரில் புரிந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க இயலும்.
#2.ரவீந்திர ஜடேஜா:
இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்து வரும் வீரர்களில் ஒருவர், ரவிந்திர ஜடேஜா. 30 வயதான இவர், இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவ்வாறு ஜொலிக்க தவறிவருகிறார். உலகின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் பலமாகும். குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் வருகைக்கு பின்னர், இந்திய ஒருநாள் அணியில் ரவிந்திர ஜடேஜா அவ்வப்போது ஓரங்கட்டப்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாது, பந்துவீச்சில் இவர் சிறப்பாக செயல்படாமல் இருப்பதும் இத்தகைய புறக்கணிப்பிற்கு மற்றொரு காரணமாகும். முதலாவது பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த ஜடேஜா, ஆடும் லெவனில் இணைக்கப் படுவதற்கான வாய்ப்பினை உறுதிபடுத்தியுள்ளார். மீண்டும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த தவறினால், இவரின் வாய்ப்பு இளம் வீரர்களுக்கு இனிவரும் காலங்களில் அளிக்கப்படலாம்.
#3.விஜய் சங்கர்:
எவ்வித சந்தேகமும் இன்றி, இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அதிர்ஷ்டமுள்ள வீரர் விஜய் சங்கர் தான். உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இடம் பெற்று அனைவரையும் ஆச்சர்யமளித்தார். இவரின் ஆல்ரவுண்ட் திறமைகளால் அணித் தேர்வாளர்கள் சற்று ஈர்க்கப்பட்டு அணியில் இவரை இணைத்தனர். ஐபிஎல் தொடர் மற்றும் பயிற்சி ஆட்டத்திலும் தொடர்ந்து மோசமாகவே செயல்பட்டு வருகிறார், விஜய் சங்கர். எனவே, ஒருவேளை உலக கோப்பை தொடரின் ஆடும் லெவனில் இவர் இணைக்கப்பட்டால், பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் கணிசமான பங்களிப்பை அளித்து தொடர்ந்து தனது வாய்ப்பினை தக்கவைத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிடில் இனி சர்வதேச போட்டிகளில் இவரை காண்பது மிக அரிதான காரியமாக நிகழக்கூடும்.