2019 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியுள்ள முதல் இரு போட்டிகளிலும் வென்று மிகவும் அதிரடியான தொடக்கத்தை அளித்துள்ளது. இந்தியா முதல் இரு போட்டிகளிலும் இரு வலிமையான அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இயல்பாக வீழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டு அதிக ரன்களையும், பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு ஆஸ்திரேலிய பேட்டிங்கையும் கட்டுப்படுத்தினர். அணியில் உள்ள அனைவரது சிறப்பான பங்களிப்பு இந்த இரு வெற்றிகளிலும் இருந்தது. இனிவரும் காலங்களிலும் இந்த ஆட்டத்திறன் இந்திய அணியிடமிருந்து வெளிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு அடுத்த சவாலான போட்டியாக நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ள நியூசிலாந்திற்கு எதிரான போட்டி இருக்கும் என நம்பப்படுகிறது. நியூசிலாந்து மிகவும் வலிமையான அணியாகவும், உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மூன்றிலுமே வெற்றியை பெற்றுள்ளது. தற்போது புள்ளி அட்டவனையில் முதலிடத்தை வகிக்கிறது நியூசிலாந்து.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி ஜீன் 13 அன்று நடைபெற உள்ளது. நாம் இங்கு இந்திய அணி கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 நியூசிலாந்து வீரர்களை பற்றி காண்போம்.
#3 லாக்கி பெர்குசன்
லாக்கி பெர்குசன் ஒரு வலதுகை வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்துள்ளார். நியூசிலாந்தின் முதல் போட்டியில் இலங்கையை 137 ரன்களில் நியூசிலாந்து சுருட்டியது. அப்போது லாக்கி பெர்குசன் 6.2 ஓவர்கள் வீசி 22 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது அதிரடி பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை பயமுறுத்துகிறார். உலகக் கோப்பை தொடரில் நல்ல எகானமி ரேட்-டுடன் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். தற்போது உலகக் கோப்பையில் 3.88 எகானமி ரேட்டுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் மிகவும் கில்லாடிகள். ஆனால் தொடர்ந்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்தை எதிர்கொள்ள உலகில் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் சற்று தடுமாறுவர். எனவே ஆட்டத்தின் ஆரம்பத்தில் லாக்கி பெர்குசனிடம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
#2 கானே வில்லியம்சன்
கானே வில்லியம்சன் சிறந்து ஒரு பேட்ஸ்மேனாக உலகில் வலம் வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அதிக சாதனைகளை பேட்டிங்கில் படைத்துள்ளார். இந்திய அணிக்கு விராட் கோலி எப்படியோ, அதேபோல் நியூசிலாந்து அணியின் பேட்டிங் லைன்-அப்பின் தூணாக கானே வில்லியம்சன் உள்ளார். கானே வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டன் என்ற பொறுப்பும் உள்ளது.
கானே வில்லியம்சன் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்குவார், மற்ற பேட்ஸ்மேன்கள் இவருக்கு பின் வரிசையில் விளையாடிவார்கள். நியூசிலாந்து அணிக்காக எந்த இடத்தில் பொறுமையாக விளையாட வேண்டும் என்றும், எந்த இடத்தில் ஆட்டத்தை மாற்றும் வகையில் அதிரடியான ஆட்டத்திறனை வெளிபடுத்த வேண்டும் என்றும் நன்கு அறிந்தவர் கானே வில்லியம்சன்.
உலகக் கோப்பையில் கானே வில்லியம்சன் ஏற்கனவே சில முக்கிய இன்னிங்ஸ்களை வெளிபடுத்தி விளையாடியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான குறைவான ரன் இலக்கு கொண்ட போட்டியில் கானே வில்லியம்சன் விளாசிய 42 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் கானே வில்லியம்சன் விளாசிய 79 ரன்கள் சேஸிங்கில் நியூசிலாந்து அணிக்கு உதவியாக இருந்தது.
கானே வில்லியம்சன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். அதனால் இந்திய அணிக்கு எதிராக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக கானே வில்லியம்சனின் சராசரி 39 ஆகும். இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சனின் ஆட்டத்திறன் எப்போதும் மிகச் சிறப்பாக இருக்கும்.