2019 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நூல் இழையிலும் வெற்றி பெற்றும் உள்ளது, இந்திய அணி. இதன் மூலம், நடப்பு உலக கோப்பை தொடரின் தோற்காத இரு அணிகளில் ஒன்றாக விளங்கிவருகிறது, இந்தியா. இந்த வெற்றிகளுக்குப் பின்னால் விராத் கோலியின் கேப்டன்சி முக்கியத்துவம் வாய்ந்தது. சரியான கட்டத்தில் வளர்ச்சி அடைந்துள்ள இவரது கேப்டன்சி தற்போது இந்திய அணிக்கு பெரிதும் உதவி வருகிறது. எனவே, இவரது கேப்டன்ஷிப் வளர்ச்சி வெளிப்பட்ட மூன்று தருணங்களை பற்றி காணலாம்.
#3.பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் விராட் கோலி:
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். அற்புத பேட்டிங் திறமையை கொண்ட இவர், முன்னாள் வீரர்களின் பற்பல சாதனைகளை அவ்வப்போது முறியடித்தும் வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாம் விக்கெட்டிற்கு ரோகித் சர்மா உடன் இணைந்து விளையாடிய விராட் கோலி 65 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். இதேபோலவே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த தவான் உடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சுக்கு பெரிய அளவிலும் ஒத்துழைத்த மைதானத்திலும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். மேலும், அந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் அமைந்தது. இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை குவித்த முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்தார், விராட் கோலி. கேப்டன்சியில் கவனம் செலுத்தும் விராட் கோலி பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட மறப்பதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.
#2.சுழற்சி முறையில் பந்துவீச்சாளர்கள்:
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர் வெற்றிகள் கண்டுள்ள இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சமியின் வேகம் எதிரணி வீரர்களை நடுநடுங்கவைத்தது. உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக பும்ரா, தனது துல்லியமான பவுன்சர்களால் மூன்றாவது விக்கெட்டின் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட் கைப்பற்றினார். இவரைப்போலவே, தனது முதல் போட்டியில் விளையாடிய முகமது சமியும் கடைசி இரு ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது யார்க்கர் வகை பந்துகளால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார். மற்ற போட்டிகளிலும், குறிப்பாக பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் விராட்கோலியால் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டி யாவையும் ஒரு பந்துவீச்சாளராக சிறப்பான முறையில் கையாண்டுள்ளார், விராட் கோலி.
#1.யுக்திகளை கடைபிடிக்கும் விராட்கோலி:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட புவனேஸ்வர்குமார் எதிர்பாராதவிதமாக ஆட்டத்தில் இருந்து விலக நேரிட்டது. இதனைக் கருத்தில் கொண்ட, விராட் கோலி ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை அழைத்து பந்துவீசச் செய்தார். அதன்படி, பந்து வீசிய விஜய்சங்கரும் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். அவர் மட்டும் அல்லாது மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவையும் சிறப்பாக பயன்படுத்தி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்த செய்தார், விராட் கோலி. அணியிலிருந்த மற்ற இரு சுழல் பந்துவீச்சாளர்களையும் சிறப்பாக பயன்படுத்தி வெற்றியும் கண்டார். அதன் பின்னர், நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் கடினமான சூழ்நிலையிலும் விஜய் சங்கரை பயன்படுத்தாமல் முகமது சமி, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரை மிகவும் சார்ந்திருந்தார், கோலி. மற்ற போட்டிகளில் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஃபீல்டர்களை நிற்கச் செய்து சில வெற்றிகளையும் கண்டுள்ளார், விராட் கோலி. ஆட்டத்தில் பலமுறை பீல்டிங்கை மாற்றி அமைத்தும் வந்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் சாதுர்யமாக செயல்படும் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அளவுக்கதிகமாக அப்பீல் செய்ததால் கோலிக்கு 25 சதவீத போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனிவரும் போட்டிகளில் இதுவரை அணியில் களம் இறக்கப்படாத ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விராட் கோலி அணி இணைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.