2019 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்குகின்றது, ஆஸ்திரேலிய அணி. ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆறாவது முறையாக தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் பங்களிப்பு மிகவும் மோசமானதாக இருந்தது. ஏனெனில், உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டு சர்வதேச போட்டிகளில் தடைக்கு உள்ளாகினர். இதனால், ஆஸ்திரேலிய அணி கடும் சிக்கல்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற 13 ஒருநாள் போட்டிகளில் 11 தோல்விகளை சந்தித்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், 2019-ஆம் ஆண்டில் புத்துணர்ச்சியுடன் துவங்கிய இந்த அணி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியது. 2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள இந்த அணி, நான்கு வெற்றிகளை குவித்து எவரும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. எனவே, இம்முறையும் இந்த அணி உலக கோப்பை தொடரை பெறுவதற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.அபாயகரமான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ்:
உலக கோப்பை தொடர்களில் சிறந்த சாதனை படைத்துள்ள மிட்செல் ஸ்டார்க், கடந்த 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி "தொடர் நாயகன்" விருது பெற்றிருக்கிறார். தற்போது வரை உலக கோப்பை போட்டிகளில் 35 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார் மிட்செல் ஸ்டார்க். இவருக்கு பக்கபலமாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டுவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றனர். 2019 உலக கோப்பை தொடரிலும் தனது அபார வேகப்பந்து வீச்சு தாக்குதலை வெளிப்படுத்தி வரும் இவர்கள் இருவரும் இணைந்து 24 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றியை பங்காற்றி வருகின்றனர்.
#2.அற்புதமான தொடர் வரலாறு மற்றும் பெரும் ஆட்டத்தை கையாளும் யுக்தி:
ஆஸ்திரேலிய அணியை போல வேறு எந்த அணியும் உலக கோப்பை தொடரில் மும்முறை கூட சாம்பியன் பட்டங்களை வென்றதில்லை. இந்த அணி தொடர்ந்து 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடர்களில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2007 வரை எவரும் தொடரும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது, ஆஸ்திரேலிய அணி. இந்த அணியில் மேத்யூ ஹெய்டன், ஸ்டீவ் வாஹ்க், ரிக்கி பாண்டிங் மற்றும் மெக்ராத் போன்ற ஜாம்பவான்கள் முக்கிய தூண்களாக திகழ்ந்தனர். இதுவரை இந்த அணி விளையாடி உள்ள ஏழு உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளைக் குவித்து உள்ளது. எனவே, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று 6-வது முறையாக கோப்பையை வெல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#3.வலிமையான பேட்டிங் வரிசை:
இந்த தொடரில் சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது, ஆஸ்திரேலிய அணி. ஏழாம் இடம் வரை தொடர்ந்து பேட்ஸ்மேன்களை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இன்னிங்சை தொடங்குவது முதல் முடிப்பது வரை பேட்டிங்கில் போதிய கவனத்தை செலுத்தி வருகிறது. ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக தொடர்ந்து களமிறக்கப்பட்ட வருகிறார்கள். இவர்கள் இருவரும் நினைத்து நின்றால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 350 ரன்களை கூட அசாத்தியமாக தாண்டும். அணி கேப்டன் ஆரோன் பின்ச் 343 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் களம் இறங்கும் ஸ்டீவன் ஸ்மித் தனது கிளாசிக் ஷாட்களால் அமர்க்களப்படுத்தி வருகிறார். அவர் பின்னால் களமிறங்கும் ஷான் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரும் தங்களது தொடர் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்பின்னர், களமிறங்கும் லோவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கிளைன் மேக்ஸ்வெல் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் வெகுவிரைவாக ரன்களை குவிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, இந்த ஏழு பேட்ஸ்மேன்களும் ஒருமித்து செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணி விரைவிலேயே 400 ரன்களை கூட கிடைக்கலாம். எனவெ, இம்முறை தொடரை வெல்வதற்கு இதுவும் ஒரு காரணமாய் அமைகிறது.