நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2019 உலகக்கோப்பை தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்திய அணி. அனைத்து மூன்று தரப்பிலுமே சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இனிவரும் போட்டிகளிலும் இத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமென ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய அணியில் குறிப்பாக, பந்துவீச்சு தரப்பு அற்புதமாக செயல்பட்டு வருகிறது. எனவே, இம்முறை உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெறுவதற்கான மூன்று காரணிகளை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது
#3.தொடரிலேயே சிறந்த பீல்டிங் அணி:
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தங்களது அசாத்திய பீல்டிங் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளது, இந்தியா. உலகின் தலை சிறந்த வீரர்களான கே.எல்.ராஹுல், விராத் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை இந்திய அணி கொண்டுள்ளது. இந்திய அணிக்கு புதுவிதமான பீல்டிங் அணுகுமுறைகளை வழங்கி வருகிறார், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர். களத்தில் பல்வேறு சவால்களை சந்தித்து தொடர்ந்து பீல்டிங்கில் கவனம் செலுத்தும் அணிகளில் முதன்மை பெற்றுள்ளது, இந்தியா. தொடரில் பெரும்பாலான கேட்சுகளை இந்திய அணி தவறவிடுவதில்லை. அதுமட்டுமின்றி, ரன்-அவுட் வாய்ப்புகளையும் அற்புதமாக கையாண்டு வருகிறது, இந்தியா. எனவே, உலக கோப்பை போன்ற குறுகிய கால கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு இதுவும் ஒரு காரணமாய் அமைந்து வருகிறது.
#2.அணியை வழி நடத்துவதிலும் ரன்களை குவிப்பதிலும் சிறப்பாக செயலாற்றும் கோலி:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நேற்றைய போட்டியில் 82 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அது மட்டுமின்றி, உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைசத்ங்களை கடந்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார், விராட் கோலி. இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளில் முறையே 18, 82, 77, 67 மற்றும் 72 ஆகிய ரன்களை குவித்து அணியின் பேட்டிங்கிற்கு தனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். கேப்டன்சியிலும் எத்தகைய தவறுகளும் நேராவண்ணம் இந்திய அணியை வழிநடத்துவதிலும் சிறப்பாக செயல்படுகிறார், விராட் கோலி.
#1.அபாரமான பந்து வீச்சு:
இந்திய அணியின் இத்தகைய தொடர் வெற்றிக்கு முதுகெலும்பாய் விளங்கி வருகிறது, பந்து வீச்சு. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து ஓய்வில் இருக்கும் புவனேஸ்வர்குமாருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட முகமது சமி இரு போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் மட்டுமன்றி, இரு சுழல் பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ரா, ஆட்டத்தின் தொடக்கம் மற்றும் இறுதிக்கட்ட நேரங்களில் சிறப்பாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தலை வலியை ஏற்படுத்துகின்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணியின் பவுலிங் தரப்பு சிறப்பாக அமைந்துள்ளது என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.