2019 உலக கோப்பை தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை சந்திக்கிறது, இந்திய அணி. இதற்கு முன்னால், இரு ஆட்டங்களில் விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துள்ள தென்ஆப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்க அணியில் இளம் மற்றும் அனுபவம் மிகுந்த வீரர்கள் உள்ளமையால் எந்த நேரத்திலும் இவர்கள் எதிர் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட போதிய வாய்ப்புகள் உள்ளன. டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது தென்னாப்பிரிக்க அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. நாளைய போட்டியில் தொடக்க வீரர் ஹசிம் அம்லா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய மூன்று வீரர்களை பற்றியும் தொகுப்பில் காணலாம்.
#1.ககிசோ ரபாடா:
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் ரபாடா. இவர் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளில் தனது அற்புதமான பௌலிங் தாக்குதல் தொடுத்து வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 68 ஒருநாள் போட்டிகளில் இவர் 108 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். தனது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடும் இவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 66 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின்ன,ர் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை கூட இவர் கைப்பற்றவில்லை. ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டைன் விலகி உள்ளமையால் அணியில் இவரின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது. நாளைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் துருப்புச்சீட்டாக இவர் விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#2.டூபிளிசிஸ்:
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனான டூபிளிசிஸ், மிடில் ஆர்டர் பேட்டிங்கின் முதுங்கெலும்பாக திகழ்கிறார். அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்ஸின் ஓய்வுக்குப் பின்னர், தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் மிகவும் நம்பிக்கை வாய்ந்த ஒருவராக இவர் கருதப்படுகிறார். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் திறமையாக கையாண்டு தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இவர் பாடுபட்டுள்ளார். இதுவரை இந்திய அணிக்கு எதிரான 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 658 ரன்களை குவித்துள்ளார். அவற்றில், இரு சதங்களும் ஐந்து அரைசதங்களும் அடக்கமாகும். எனவே, நாளைய போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை சிறப்பாக எதிர்கொண்டு அணியின் வெற்றிக்கு பாடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணியில் இவர் சீராக ரன்களை குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3.குயின்டன் டி காக்:
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக், சமீப காலங்களில் அந்த அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறார். 2019 உலக கோப்பை தொடரிலும் இவரின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்க அணியிலேயே அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் இவர் தான். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதுவரை இந்திய அணிக்கு எதிராக 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 5 சதங்கள் ஒரு அரைசதம் உட்பட தனது பேட்டிங் சராசரியை 66க்கும் மேல் கொண்டுள்ளார்.