2019 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து, கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இங்கிலாந்து ரசிகர்களுக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தது. இம்முறை உலகக் கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து கணிக்கப்பட்ட வேளையில், தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகள் இங்கிலாந்து அணியை சற்று கதிகலங்க வைத்துள்ளது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை கண்டு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. இருப்பினும், எஞ்சியுள்ள போட்டிகளில் பலம் மிகுந்த அணிகளை மோத இருப்பதால் இங்கு அந்த அணியின் வெற்றி சற்று கேள்விக்குறிதான். எனவே, இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை நழுவ விடுவதற்கான மூன்று காரணிகளை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியும் பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்:
புள்ளி பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளை இங்கிலாந்து அணி இனிவரும் போட்டிகளில் எதிர்கொண்டும் எதிர்கொள்ளவும் உள்ளது. இலங்கை அணிக்கெதிரான போட்டியில் தோல்வியுற்றதால் அடுத்த சுற்றில் நீடிக்க தனது மிகுந்த போராட்டத்தினை இங்கிலாந்து வெளிப்படுத்த வேண்டி உள்ளது. இன்று விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி உட்பட இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து மூன்று தோல்விகளை கண்டால் அடுத்த சுற்று வாய்ப்பு பாகிஸ்தான் அணியிக்கு பறிபோகும். ஏனெனில், பாகிஸ்தான் அணிக்கு எஞ்சியுள்ள இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை சந்தித்திருக்கின்றது. எனவே, அந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
#2.இங்கிலாந்து அணி இரு போட்டிகளில் தோற்று தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால்:
எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால், இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவு தான். இது போன்ற சூழ்நிலைகளில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றால், அடுத்த சுற்று வாய்ப்பை நோக்கி பயணிக்க இயலும். இதற்கு எதிர்மாறாக, இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை வரும். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றாலும் அடுத்த இரு போட்டிகளில் இலங்கை வெற்றி கண்டால் 10 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் இலங்கை முன்னேறும். இதன்மூலம், நிகர ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளும் வாய்ப்பு உள்ளது.
#1.இங்கிலாந்து ஒரு வெற்றியை மட்டுமே கண்டு வங்கதேசம் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றால்:
மூன்றாவது காரணியாக, இங்கிலாந்து ஒரு வெற்றியை மட்டுமே பெற்று வங்கதேசம் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் இங்கிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மிகவும் மங்கிப் போகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கண்ட வங்கதேசம், தனது இறுதிப் போட்டிகளில் பலமிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரு அணிகளை காட்டிலும் வங்கதேசம் வலிமை குறைந்த அணியாக திகழ்ந்தாலும் எந்நேரத்திலும் ஆச்சரியமளிக்கும் வகையில் செயல்படக் கூடும். தொடரின் முடிவில் 11 வெற்றி புள்ளிகளுடன் வங்கதேசம் காணப்படும் வேளையில் இனி வரும் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே இங்கிலாந்து குவித்தால், அடுத்த சுற்று வாய்ப்பு வங்கதேச அணிக்கு பிரகாசமாகும். இதன்மூலம், உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று வங்கதேச அணி வரலாற்று சாதனை படைக்கும். கடந்த 2015ஆம் உலக கோப்பை தொடரின் காலிறுதியில் இந்திய அணியிடம் 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த சோதனைகளை எல்லாம் கடந்து வெற்றியை நோக்கி பயணிக்க உள்ளது, இங்கிலாந்து.