சர்வதேச கிரிக்கெட்டில் பல வீரர்களும் தங்களது சொந்த நாட்டிற்காக விளையாடாமல் வேறொரு நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். உதாரணமாக, தென்னாபிரிக்காவில் பிறந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து நாட்டிற்காக விளையாடினார். அதேபோல, இந்தியாவில் பிறந்த ஷிவ்நாராயன் சந்திரபாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அவ்வாறு, 2019 உலகக் கோப்பை தொடரில் மற்றொரு நாட்டிற்காக விளையாடும் 4 கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.பென் ஸ்டோக்ஸ் - நியூஸிலாந்தில் பிறந்து இங்கிலாந்து நாட்டிற்காக விளையாடி வருகிறார்:
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறைஸ் சர்ச்சில் பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் கூட 89 ரன்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தார். இவர் பங்கேற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் 2300 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 3100 ரன்களையும் குவித்துள்ளார். பந்துவீச்சில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முறையே 65 மற்றும் 127 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2.இமாத் வாசிம் - இங்கிலாந்தில் பிறந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்:
வால்சில் உள்ள சுவான்சியா மாகாணத்தில் பிறந்தவரான இமாத் வாசிம், இளம் வயதில் தான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். பிற்காலத்தில், வலது கை சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார். பேட்டிங்கிலும் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 39 ஒருநாள் போட்டிகளில் 779 ரன்களையும் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் இவர் களம் கண்டு ஒரு ரன் மட்டுமே குவித்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
#3.ஜாசன் ராய் - தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்:
கெவின் பீட்டர்சனை போல இவரும் தென்னாபிரிக்க நாட்டில் பிறந்த வீரர் ஆவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் 54 ரன்கள் குவித்து ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் எட்டு சதங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார், ஜாசன் ராய்.
#4.காலின் டி கிராண்ட் ஹோம் - ஜிம்பாப்வேயில் பிறந்து நியூஸிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்:
நியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான காலின் தி கிராண்ட் ஹோம், ஜிம்பாப்வேயின் பிறந்தவராவார். ஜிம்பாப்வே அணிக்காக 2004-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் இவர் இடம்பெற்றுள்ளார். அதன்பின்னர், நியூஸிலாந்து அணியில் இடம்பெற்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிறந்த பவுலிங் சாதனையை படைத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை இவர் படைத்துள்ளார். கிரைஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி இத்தகைய சாதனையை இவர் புரிந்துள்ளார். 2019 உலக கோப்பை தொடரிலும் கூட இரு போட்டிகளில் களமிறங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 820 ரன்களை 37 என்ற சராசரியுடன் குவித்துள்ளார்.