ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் இக்கட்டான மழை சூழ்நிலையில் நடந்தது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு கடும் போட்டியாகவும், அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படும். இந்திய அணி நெருக்கடியை சரியாக கையாண்டு வரலாற்றில் மீண்டுமொருமுறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையில் மழைகுறுக்கீட்டிற்கு இடையில் மற்றொரு முறை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சஃப்ரஸ் அகமது இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்தது. ரோகித் சர்மா இப்போட்டியில் மற்றொரு மிகப்பெரிய சதத்தினை விளாசினார். இவர் இப்போட்டியில் 113 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில் அதிக ரன் இலக்கை குவிக்கப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வகுத்து சிறப்பாக செயல்படுத்தினர். விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நாம் இங்கு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கு காரணமாக இருந்த 4 காரணிகளை காண்போம்.
#4 இந்திய ஆல்-ரவுண்டர்களின் கலவை
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என 4 ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்திறனை இந்திய அணிக்கு அளிப்பதில் வல்லவர்கள். இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிக இலக்கை துரத்திய பாகிஸ்தானை புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆரம்ப ஓவர்களில் பந்துவீசி கட்டுபடுத்தி வந்தனர். இருப்பினும் புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் அவரது மூன்றாவது ஓவருடன் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். கேப்டன் விராட் கோலி அந்த ஓவரை சமநிலை படுத்தும் வகையில் விஜய் சங்கருக்கு பௌலிங் செய்ய வாய்ப்பளித்தார். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவர் சரியான இடங்களில் பந்தை வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்து நல்ல எகானமிக்கல் பௌலராக திகழ்ந்தார். விஜய் சங்கர் மேலும் தனது ஆல்-ரவுண்டர் திறனை நிறுபிக்கும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமதுவை போல்ட் ஆக்கி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்திய அணியின் முதன்மை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சரியாக பயன்படுத்தியது இந்திய அணி. பேட்டிங்கில் 25 ரன்களை குவித்த 25 வயதான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடின இலக்கை துரத்தி கொண்டிருந்த பாகிஸ்தானின் இரு அனுபவ பேட்ஸ்மேன்களான சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஜை அடுத்தடுத்த இரு பந்துகளில் வீழ்த்தினார்.
விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பௌலிங் சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் எழுந்த வந்த நிலையில், இந்திய முதன்மை பௌலர்களுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கும் விதத்தில் இரு ஆல்-ரவுண்டர்களும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினர்.