ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை திருவிழாவை உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பப்படும் தொடராக வலம் வருகிறது. 12வது உலகக் கோப்பை சீசன் மே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வருடம் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று உள்ளன.
இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை தொடரிலும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக சாதகமாக அமைந்துள்ளது. பௌலர்களுக்கு அதிக நெருக்கடியை கடந்த கால உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தியுள்ளனர். உலகக் கோப்பை தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்திய முன்னணி வீரர்களாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோர் திகழ்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் 2003 உலகக் கோப்பை தொடரில் 673 ரன்களை குவித்து அதிக ரன்களை ஒரு உலகக்கோப்பை சீசனில் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 16 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த சாதனையை யாரும் முறியடித்தது இல்லை. இருப்பினும் 2019 உலகக் கோப்பை புதிய வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உலகில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்கள் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள காரணத்தால் இந்த சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் இங்கு ஒரு உலகக்கோப்பை சீசனில் அதிக ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி காண்போம்.
#4 ஜானி பேர்ஸ்டோவ்
அதிரடி வலது கை பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் 2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று 10 போட்டிகளில் விளையாடி 55.62 சராசரியுடன் 445 ரன்களை குவித்துள்ளார். கடந்த இரு வருடங்களாக ஜானி பேர்ஸ்டோவ் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். 2017ஆம் வருடம் ஜானி பேர்ஸ்டோவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. 10 போட்டிகளில் பங்கேற்று 106.80 சராசரியுடன் 534 ரன்களை விளாசினார். இதில் 2 சதங்கள் அடங்கும். 2018ல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி 46.59 சராசரி மற்றும் 4 சதங்களுடன் 1025 ரன்களை குவித்துள்ளார்.
தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஜானி பேர்ஸ்டோவ் இங்கிலாந்து உலகக் கோப்பையில் ஒரு முண்ணனி வீரராக வலம் வருகிறார். இவர் தற்போது 40 சராசரியுடனும், மற்றும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவராக திகழ்கிறார். உலகக் கோப்பை தொடரில் வலது கை பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவ் எதிரணி பௌலர்களுக்கு தனது பேட்டிங்கில் பெரும் தலைவலியை ஏற்படுத்துவார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் ஜானி பேர்ஸ்டோவ்.
#3 கிறிஸ் கெய்ல்
உலகக் கோப்பை தொடரில் கிறிஸ் கெய்ல் பங்கேற்றாலே அதிகம் கவணிக்கப்பட கூடிய வீரராக திகழ்வார். கடந்த உலகக் கோப்பை சீசனில் இரட்டை சதம் விளாசி உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முதலாக இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கிறிஸ் கெய்ல், டாப் ஆர்டரில் எதிரணி பௌளர்களுக்கு கடும் நெருக்கடியை அளிப்பார்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 6 போட்டிகளில் பங்கேற்று 94.80 சராசரி மற்றும் 135.42 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 474 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். கிறிஸ் கெய்ல் தனது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அளித்து கோப்பையை வெல்ல பாடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ் கெய்லிற்கு காயம் ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து 2019 உலகக் கோப்பை தொடரில் அனைத்து லீக் போட்டிகளிலும் பங்கேற்றால் கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்களை முறியடிப்பார்.
#2 விராட் கோலி
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் வலம் வருகிறார். அத்துடன் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகவும் இந்தியா திகழ்கிறது. விராட் கோலி 2019ல் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்து 55.54 சராசரியுடன், 3 சதம் மற்றும் 1 அரைசதத்துடன் 611 ரன்களை குவித்துள்ளார்.
விராட் கோலியின் ஆட்டத்திறன் கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவையான மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்துடன் இந்திய கேப்டனாகவும் அணியை வழிநடத்துவதில் முண்ணனி வீரராக விராட் கோலி உள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் விராட் கோலியின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர்களில் முன்னணி வீரராக விராட் கோலி தற்போது உள்ளார்.
#1 டேவிட் வார்னர்
சிறந்த அனுபவ ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஒரு வருடம் தடை செய்யப்பட்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் மிக வலிமையுடன் திரும்பியுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அதே ஆட்டத்திறனை மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காகவும் வெளிபடுத்துவார்.
உலகின் தலைசிறந்து விளங்கும் பந்துவீச்சை சிறப்பான முறையில் டேவிட் வார்னர் எதிர்கொள்வார். டாப் ஆர்டரில் டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த தொடக்கத்தை உலகக் கோப்பை தொடரில் அளிப்பார்.
2017ல் டேவிட் வார்னர் 13 போட்டிகளில் பங்கேற்று 57.58 சராசரியுடன் 691 ரன்களை குவித்துள்ளார். 43.43 ஒருநாள் சராசரியுடன் திகழும் டேவிட் வார்னர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.