நவீன கால கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒவ்வொரு வீரருக்கும் பரபரப்பானது தான். இவர்கள் அனைவரும் சர்வதேச அளவில் தங்களது தாய் நாட்டை பெருமைப்பட செய்யும் அளவிற்கு கடினமாக உழைக்க நேரிடும். ஒரு டி20 கிரிக்கெட் வீரரானால், அவர் ஆண்டு முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடுவது மட்டுமே முழு நேர பணியாகும். ஆனால், இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு டி20 தொடரில் விளையாடி உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக பங்காற்றும் பொறுப்பினை பல வீரர்கள் கொண்டுள்ளனர். அதேபோல், 2019 இந்தியன் பிரீமியர் லீக் முடிந்த பின்னர், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐசிசி உலக கோப்பை தொடர் துவங்கியது. ஐபிஎல் தொடரில் சொதப்பி கடும் விமர்சனத்திற்கு உள்ளான வீரர்களில் சிலர், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் தங்களது ஆட்டத்தால் பதிலளித்து வருகின்றனர். அவ்வாறான சில வீரர்களை பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
#4.ரோகித் சர்மா - இந்தியா:
குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் வரை 88 என்ற பேட்டிங் சராசரி உடன் 442 களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 93 என்ற வகையில் ஆரோக்கியமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாகவும் இவர் திகழ்ந்து வருகிறார். உலகக் கோப்பை தொடருக்கு முன்னர், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியை வழிநடத்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாய் அமைந்தார். இருப்பினும், பேட்டிங்கில் இவரது பங்களிப்பு சராசரி தான். தொடரின் 15 போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் 405 ரன்கள் மட்டுமே குவித்தார். அவற்றில் இரு அரைசதங்களை கடந்த இவர், ஒரு சதத்தைக்கூட அடிக்க முற்படவில்லை. மேலும், 12 ஐபிஎல் சீசனில் மொத்தம் 62 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இதற்கு எதிர்மாறாக, தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் கடந்த ஆட்டம் வரை 53 பவுண்டரிகளை வெளுத்து வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இன்று நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், நடப்புத் தொடரில் 500 ரன்களை கடந்த முதலாவது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார், ரோகித் சர்மா.
#3.முஜிப் ரகுமான் - ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் மாயஜால சுழற்பந்து வீச்சாளரான முஜிப் ரகுமான், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடினார். கடந்த ஆண்டு 11 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது பவுலிங் எக்னாமிக்கை 7க்கு மிகாமல் பந்து வீசி அசத்தினார். இந்த சிறப்பான தனது அறிமுக தொடரின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்த இவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் சோபிக்க தவறினார். 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றமளித்தார். கடந்த ஆண்டு 17ஆக இருந்த பௌலிங் ஸ்ட்ரைக் ரேட் இந்த ஆண்டு 38 என்று மோசமானதாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இவரது பந்துவீச்சு எக்கனாமிக் 10க்கும் மேல் சென்றது. இதனால் பெரும்பாலான போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பெறாமல் தவித்து வந்தார், முஜிப் ரகுமான். இருப்பினும், இந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதேயான இவர், 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும், இவரது எக்கனாமிக் 4 ரன்களுக்கு மிகாமல் உள்ளது. ரஷீத் கான் மற்றும் ஹமீத் ஹாசனுக்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது பந்துவீச்சாளராகவும் இவர் விளங்கிவருகிறார்.
#2.பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து:
நடப்பு உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியில் உள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது அற்புதமான பங்களிப்பினை தொடர்ந்து அளித்து வருகிறார். 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இடம்பெற்று வெறும் 123 ரன்களை 20 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்து ஏமாற்றமளித்தார். பந்துவீச்சிலும் 6 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி எக்கனாமிக் ரேட்டை 11க்கு மேல் விட்டுக் கொடுத்தார். இதனால் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படமாட்டார் என அனைவரும் எண்ணிய நிலையில், தற்போது ஆச்சரியமளித்து வருகிறார். நியூசிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது வரை 370 ரன்களை 60 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக தொடரின் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் 9வது இடத்திலும் இங்கிலாந்து அணி தரப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளார், பென் ஸ்டோக்ஸ். இதுவரை 6 விக்கெட்களை கைப்பற்றியும் இவரது பந்துவீச்சு சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கூட இவர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#1.ஷகிப் அல்-ஹஸன் - வங்கதேசம்:
வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், இதுவரை இல்லாத ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடரை தனது அணியினருக்கு அளித்து வருகிறார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் இவரது செயல்பாடு மிகவும் மோசம் தான். 2019 ஐபிஎல்-ல் மூன்று போட்டிகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே குவித்து ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார். பந்துவீச்சிலும் சிறந்த ஒரு தாக்கத்தினை இவர் ஏற்படுத்த முயலவில்லை. ஆனால், இதை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தனது அணியை எப்படியாவது அரையிறுதி சுற்றுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உள்ளார். பேட்டிங்கில் 95 என்ற சராசரியுடன் 476 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், ஒட்டு மொத்தத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்திலும் வங்கதேச அணியின் சார்பில் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சிலும் ஒரே போட்டியில் 5 விக்கெட் உட்பட மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையையும் படைத்துள்ளார்.