2019 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய வீரர்கள்

Chris Gayle and De Kock
Chris Gayle and De Kock

பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் கடந்த மே மாதம் முடிவடைந்தது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை வென்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இத்தகைய தொடரில் விளையாடுவதால் கூடுதல் பணிச்சுமை மற்றும் காயங்கள் ஏற்படும் என கருதி பல வீரர்கள் விளையாடவில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலியா அணியின் பெரும்பாலான வீரர்கள் இந்த மிகப்பெரிய டி20 தொடரை புறக்கணித்தனர். இருப்பினும், மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் வெகுவாக கலந்து கொண்டு தொடரின் இறுதி வரை தாங்கள் இடம்பெற்றிருந்த அணிகளுக்கு அற்புதமாக பங்களித்துள்ளனர். கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் வெளிநாட்டு வீரர்களின் பாங்கு போற்றத்தக்கது. இருப்பினும், சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஜொலித்து உலக கோப்பை தொடரில் சோபிக்க தவறிய அவ்வாறான வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

#4.குயின்டன் டி காக் - தென் ஆப்பிரிக்கா:

Quinton de Kock
Quinton de Kock

தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக், கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாய் அமைந்தார். தொடரின் 16 போட்டியில் விளையாடிய இவர், 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 529 ரன்களை குவித்து அமர்க்களப்படுத்தினார். இதன் மூலம், தொடரின் இறுதியில் அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாம் இடம் வகித்தார், குயின்டன் டி காக். ஐபிஎல் தொடருக்கு முன்னர், நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் கண்டு நம்பிக்கையளித்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 353 ரன்களை 70.60 சராசரியுடன் குவித்திருந்தார். இதனால் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோபிக்க தவறினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது லீக் சுற்று போட்டியில் 68 ரன்கள் குவித்து சிறப்பாக துவங்கினார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இரு அரை சதங்கள் உள்பட 253 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். ஓரளவுக்கு பங்களிப்பு இருந்தாலும் உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் அணியை வெற்றி பெறச் செய்ய இது போன்ற குறைவான ரன்கள் போதாது.

#3.கிறிஸ் கெயில் - வெஸ்ட் இண்டீஸ்:

Chris Gayle
Chris Gayle

"யுனிவர்சல் பாஸ்" என்று ரசிகர்களால் புகழப்படும் கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் அபாயகரமான வீரர்களில் ஒருவராக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். கடந்த ஐபிஎல் சீசன்களை போலவே இந்த ஐபிஎல் தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று 13 போட்டிகளில் விளையாடினார். அவற்றில் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 490 ரன்களை குவித்து அசத்தினார். 39 வயது கடந்த போதும் இவரின் ஆட்டம் பலரை மெய்சிலிர்க்க வைத்தது. 2019 ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 153.60 என்ற வகையில் அமைந்தது. ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர், நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். இதனால் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எண்ணினர். இருப்பினும், இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மொத்தம் 235 ரன்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்ததே இவரது சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இரு அரை சரங்களை கடந்த போதிலும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க தவறியுள்ளார், கிறிஸ் கெய்ல். தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான இவர், இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்து கூடுதல் ரன்களை குவித்தால் ஆணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்து இருக்கும்.

#2.ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா:

Kagiso Rabada, the South African speedster, had a stellar IPL 2019 campaign
Kagiso Rabada, the South African speedster, had a stellar IPL 2019 campaign

உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவராகத் திகழும் ரபாடா, 2019 ஐபிஎல் தொடரில் தனது மிரட்டல் பந்துவீச்சு எதிரணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். இவர் விளையாடிய 12 போட்டிகளில் 25 விக்கெட்களை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், இவரது பவுலிங் எகனாமிக் 7.82 என்ற வகையில் சிறப்பாக அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் அற்புதமாக யார்கர் பந்தை வீசி அதிரடி வீரர் அந்திரே ரஸலை ஆட்டமிழக்கச் செய்தார். அதுவே 2019 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

முதுகில் ஏற்பட்ட காயம் சற்று பெரிதாகி உலக கோப்பை தொடரில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே ஐபிஎல் தொடரில் இருந்து விரைவிலேயே விலகினார், ரபாடா. இருப்பினும், இவரது சிறந்த பந்து வீச்சு தாக்குதல் உலக கோப்பை தொடரிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 8 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது, இவரது பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 51 என்ற வகையில் மிக மோசமாக அமைந்தது. ஐபிஎல் போன்ற தொடர்களில் எங்களது அணி வீரர்களை அனுமதிக்க செய்தது தற்போது எங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது என தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளிசிஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#1.ஆந்திரே ரஸல் - வெஸ்ட் இண்டீஸ்:

Andre Russell
Andre Russell

2019 ஐபிஎல்-ல் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கிய ஆந்திரே ரஸல், தொடரின் 14 போட்டிகளில் விளையாடி 510 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 204.81 என்ற வகையில் அமர்க்களமாக அமைந்தது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 11 விக்கெட்களை கைப்பற்றி கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தரப்பை சரி செய்தார். அதுமட்டுமல்லாமல், தொடரின் முடிவில் "மிக மதிப்பு மிக்க வீரர்" என்ற விருதை வென்றார், இந்த ஆல்ரவுண்டர். தொடரின் சில ஆரம்ப போட்டிகளில் லோவர் டவுன் ஆர்டரில் களம் இறங்கி சில மறக்க முடியாத அற்புத ஆட்டங்களை அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்காற்றியமையால் உலக கோப்பை தொடரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், எதிர்பார்ப்புக்கு தக்கபடி இந்த ஆல்ரவுண்டர் செயல்படவில்லை. உலக கோப்பை தொடரின் மூன்று இன்னிங்சில் களமிறங்கிய இவர், வெறும் 36 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றமளித்தார். நான்கு இன்னிங்சில் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இவர் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களது முதலாவது லீக் சுற்று போட்டியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியதோடு வேறு எந்த போட்டியிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். தொடர்ந்து ஏமாற்றங்களை அளித்து வந்தாலும் தொடரின் பிற்பாதியில் சிறப்பாக செயல்படுவார் என பல்வேறு ரசிகர்களும் நம்பி வந்தனர். இருப்பினும், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் எதிர்பாராதவிதமாக காயத்தால் அவதிப்பட்டு உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் ஆந்திரே ரஸல்.

Quick Links

Edited by Fambeat Tamil