#1.ஆந்திரே ரஸல் - வெஸ்ட் இண்டீஸ்:
2019 ஐபிஎல்-ல் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கிய ஆந்திரே ரஸல், தொடரின் 14 போட்டிகளில் விளையாடி 510 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 204.81 என்ற வகையில் அமர்க்களமாக அமைந்தது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 11 விக்கெட்களை கைப்பற்றி கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தரப்பை சரி செய்தார். அதுமட்டுமல்லாமல், தொடரின் முடிவில் "மிக மதிப்பு மிக்க வீரர்" என்ற விருதை வென்றார், இந்த ஆல்ரவுண்டர். தொடரின் சில ஆரம்ப போட்டிகளில் லோவர் டவுன் ஆர்டரில் களம் இறங்கி சில மறக்க முடியாத அற்புத ஆட்டங்களை அளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்காற்றியமையால் உலக கோப்பை தொடரில் மிகவும் அச்சுறுத்தலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், எதிர்பார்ப்புக்கு தக்கபடி இந்த ஆல்ரவுண்டர் செயல்படவில்லை. உலக கோப்பை தொடரின் மூன்று இன்னிங்சில் களமிறங்கிய இவர், வெறும் 36 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றமளித்தார். நான்கு இன்னிங்சில் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இவர் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களது முதலாவது லீக் சுற்று போட்டியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியதோடு வேறு எந்த போட்டியிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். தொடர்ந்து ஏமாற்றங்களை அளித்து வந்தாலும் தொடரின் பிற்பாதியில் சிறப்பாக செயல்படுவார் என பல்வேறு ரசிகர்களும் நம்பி வந்தனர். இருப்பினும், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் எதிர்பாராதவிதமாக காயத்தால் அவதிப்பட்டு உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் ஆந்திரே ரஸல்.