ஆப்கானிஸ்தான் 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் ஒரு நல்ல இடத்தில் உள்ளது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்திய அணிக்கு அடுத்ததாக சிறந்த அணியாக திகழ்கிறது. ஆனால் ஐசிசி 2019 உலக கோப்பை தொடரில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறந்த ஆட்டத்திறனை ஆப்கானிஸ்தான் வெளிப்படுத்தவில்லை.
நாம் இங்கு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்திற்கான 4 முக்கிய காரணங்களை காண்போம்.
#1 அஸ்கர் ஆஃப்கானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது
உலகக் கோப்பை தொடங்க சரியாக 2 மாதங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யாரும் எதிர்பாராத ஒரு முடிவு ஒன்றை எடுத்தது. அதன்பின் ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆஃப்கானை நீக்கிவிட்டு குத்புதீன் நைபை புதிய கேப்டனாக நியமித்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த கேப்டனாக அஸ்கர் ஆஃப்கான் திகழ்ந்துள்ளார். இவரது தலைமையில் 53 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 31 போட்டிகளில் வென்றுள்ளது. ஜீம்பாப்வேவில் நடந்த 2019 உலகக் கோப்பை குவாலிஃபையரில் அஸ்கர் ஆப்கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று 2019 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. தனது சிறப்பான கேப்டன்ஷீப்புடன் சேர்த்து தன்னுடைய பங்களிப்பையும் அணிக்கு அளித்துள்ளார்.
இவரது பேட்டிங் மற்றும் களத்தில் அஸ்கர் ஆப்கான் எடுக்கும் சிறந்த முடிவுகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியாக இருக்கும். ஆனால் தற்போது இவர் ஆப்கானிஸ்தான் அணியில் கூட இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்கர் ஆப்கானின் பேட்டிங் சராசரி 23 ஆனால் ஆவருக்கு மாற்று வீரராக அணியில் இடம்பெற்றுள்ள வீரரின் சராசரி 21 ஆகும். இது அந்த அணிக்கு அமைந்துள்ளத மிகப்பெரிய இழப்பு மற்றும் ரசிகர்களிடையே சந்தேகமும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எதற்காக எடுத்தார்கள் என தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திலும் அரசியல் புகுந்துள்ளது என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
#2 ரஷீத் கான் மற்றும் முகமது நபிக்கு அதிக வேலைப்பளு
அதிக கிரிக்கெட் போட்டிகள் விளையாடினால் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்படும் என்பது ஐதீகம். இருப்பினும் இது பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை கணிக்க அளிக்கப்பட்ட வாய்ப்பாக இருக்கும் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த சிக்கலுக்கு முகமது நபி மற்றும் ரஷீத் கான் தற்போது உள்ளாகியுள்ளனர். இவர்கள் இருவரும் உலகெங்கும் நடைபெறும் பிரபல டி20 தொடர்களான ஐபிஎல், பிக்பேஸ், கரேபியன் பிரிமியர் லீக் போன்றவற்றுள் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து ஓய்வின்றி தங்களது கிரிக்கெட்டை விளையாடி வந்தனர். இதற்கு முதன்மை காரணம் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காகத்தான்.
ஆனால் 2015 உலகக் கோப்பை தொடரில் அவர்களது ஆட்டத்திறன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக இவர்கள் இருவரது பௌலிங் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் அளவிற்கு இல்லை.
அடுத்தாக முகமது நபி மற்றும் ரஷீத் கானின் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஆப்கானிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். இருவரது பேட்டிங் சராசரி 9 ஆக உலகக் கோப்பையில் உள்ளது. இந்நிகழ்வு ஆப்கானிஸ்தான் அணியை பெரிதும் பாதித்துள்ளது.
#3 ஹமித் ஹாசனின் மோசமான ஃபிட்னஸ்
2015 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த ஹமித் ஹாசன், அந்த தொடருக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியில் சரியாக இடம்பெறவில்லை. பின்னர் மீண்டும் நேரடியாக 2019 உலகக் கோப்பை தொடரில் களமிறக்கப்பட்டுள்ளார்.
2015 உலகக் கோப்பைக்கு பிறகு காயத்திற்கு உள்ளான இவர், 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் விளையாடிய 63 சர்வதேச போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இரு உலகக் கோப்பை தொடர்களிலும் அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்றிருந்தால் கண்டிப்பாக ஒரு சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இவரது வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன்களை சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். கடந்த உலகக் கோப்பை தொடரிலும் இவருக்கு காயப் பிரச்சினை இருந்தது குறிப்பிடத்தக்கது.
#4 நெருக்கடியை சரியாக எதிர்கொள்ள தவறியது
சரியான ஆட்டத்திறன் வெளிபாடு இல்லாதது, மோசமான அனுபவத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கும். இதனால் நெருக்கடியான சமயங்களில் போட்டியை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பம் வீரர்கள் மத்தியில் ஏற்படும். உலகக் கோப்பை போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்களில் இவ்வாறு ஒரு அணி செயல்படுவது மிகவும் சிக்கலான விஷயமாகும்.
கடினமான சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் மோசமான ஃபீல்டிங் அணிக்கு மிகுந்த பலவீனத்தை ஏற்படுத்தும். கேட்ச் பிடிக்க தவறுவது, மோசமான ஃபீல்டிங், தவாறான ஷாட்களை தேர்ந்தெடுப்பது, 50 ஓவர்கள் முழுவதும் நிலைத்து விளையாட தவறுவது போன்றன ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவமில்ல திறனை எடுத்துரைக்கிறது. உலகின் டாப் அணிகளுடன் போதும் போது எவ்வாறு வீரர்களை கையாள்வது என்ற நுணுக்த்துடன் செயல்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராக அந்த அணியின் பேட்டிங் சொதப்பலால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது போல் தென்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பையும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தி கொள்ளமால் தவற விட்டது.
மீதமுள்ள 6 போட்டிகளையாவது ஆப்கானிஸ்தான் அணி பயன்படுத்திக் கொண்டு ஏதாவது மாற்றத்தை நிகழ்த்துமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.