இந்திய ரசிகர்களின் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜுன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது. ஃபேப் டுயுபிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றி கூட பெறவில்லை.
உலகக் கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையாக திகழும் இந்திய அணி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் உள்ள வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா. இந்த அணி பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியின் பலவீனத்தை நன்கு அறிந்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் போட்டியில் இந்திய அணிக்கு அதிக சாதகமான வாய்ப்புகள் இருப்பதற்கான 4 காரணங்களை நாம் இங்கு காண்போம்.
#1 நல்ல ஓய்வு மற்றும் சரியான சிறு இடைவெளி
இந்திய அணி நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா மே 30 லிருந்து தற்போது வரை இரு போட்டிகளில் பங்கேற்று உள்ளது. தென்னாப்பிரிக்க அணி ஒரு சிறப்பான ஃபீல்டிங் அணியாக கடந்த கால உலகக் கோப்பை தொடரில் வலம் வந்துள்ளது. அந்த அணியின் முன்னாள் வீரர்கள் நன்றாக ஃபீலடிங் செய்யக்கூடியவர்கள். கடந்த காலத்தில் ஃபீல்டிங்கிற்காகவே பெயர் போன அணி தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் வலிமையே அந்த அணியின் சிறப்பான ஃபீல்டிங் தான். ஆனால் 2019 உலகக் கோப்பையில் சிறு சிறு தவறுகளை ஃபீல்டிங்கில் அந்த அணி செய்தது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் மிகவும் மோசமானதாக இருந்ததது. நிறைய பவுண்டரிகளை தவறவிட்டனர். இதனை காணும் போது கண்டிப்பாக அவர்கள் ஓய்வின்றி விளையாடி வருவதனால் சோர்வு அடைந்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சரியான ஆற்றல் என்பது அவர்களிடம் தற்போது இல்லை. அதிக சோர்வு மற்றும் வேலைப்பளு காரணமாகவே தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திற்கு உள்ளாகுகின்றனர்.
மறுமுனையில் இந்திய அணியை பார்க்கும் போது ஐபிஎல் தொடர் முடிந்து 3 வாரங்கள் சிறப்பான ஓய்வை எடுத்துள்ளனர். பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் ஐபிஎல் முடிந்த பிறகு எந்தவித மாதிரி போட்டிகளையும் இந்தியாவில் நடத்தவில்லை. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தங்களது நேரங்களை செலவிட நாட்களை உலகக் கோப்பை வீரர்களுக்கு அளித்தது.
இந்திய வீரர்களும் நன்றாக ஓய்வெடுத்து விட்டு தற்போது மீண்டும் அதிக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்து சென்றதிலிருந்து கடின பயிற்சியை வீரர்களுக்கு அளித்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் இந்திய அணியின் பயிற்சி புகைப்படங்களை நாம் காண முடிந்ததது. இதனை காணும் போது இந்திய அணி சிறந்த நம்பிக்கையுடனும் நன்றாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளது என்பது நமக்கு நன்றாக தெரிகிறது.
#2 இந்திய அணியின் நிலையான பேட்டிங் vs தென்னாப்பிரிக்காவின் சொதப்பலான பேட்டிங்
கடந்த இரு ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்துள்ளது. இதற்கு தீர்வாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். கடந்த வாரத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சதம் விளாசினார்.
கே.எல்.ராகுலின் தக்க சமயத்தில் இந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி தற்போது வலிமையான பேட்டிங் அணியாக திகழ்கிறது. கே.எல்.ராகுல், நம்பர் 3ல் களமிறங்கும் விராட் கோலி மற்றும் நம்பர்-5ல் களமிறங்கும் எம்.எஸ்.தோனியுடனும் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவராக திகழ்கிறார். உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை விராட் கோலி குவித்து சாதனை படைப்பார் என நம்பப்படுகிறது, அத்துடன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் தான் வெளிபடுத்திய ஆட்டத்திறனை உலகக் கோப்பை தொடரிலும் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார் மகேந்திர சிங் தோனி.
இந்திய அணிக்கு தற்போது உள்ள மிகப் பெரிய கவலை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இரு பயிற்சி ஆட்டத்திலுமே ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவருமே ஆரம்பத்திலே தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி இரு வாரங்கள் இங்கிலாந்தில் நன்கு பயிற்சி மேற்கொண்டு அந்த ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்து வைத்திருக்கும். எனவே ரோகித், தவான் இருவரும் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. 2013 சேம்பியன் டிராபியில் இங்கிலாந்து மைதானத்தில் ரோகித் மற்றும் தவான் இருவருமே சிறந்த பார்டனர்ஷீப் விளையாடியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்திய அணியின் பேட்டிங் அதிரடியாக இருக்குமெனில், தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற வாய்ப்புள்ளது. ஹாசிம் அம்லாவும் இந்த போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் குவின்டன் டிகாக் ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் அந்நிய ஈரப்பத மற்றும் மேகமுட்டமான மண்ணில் சற்று விளையாட தடுமாறுவார்கள். அத்துடன் தென்னாப்பிரிக்க அணி கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஏபி டிவில்லியர்ஸிற்குப் பிறகு மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனை கொண்டு வர தவறவிட்டனர். கூடிய விரைவில் இந்த மிடில் ஆர்டரில் ஒரு நிலையான பேட்ஸ்மேனை தென்னாப்பிரிக்கா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 இந்திய அணியின் வெவ்வேறு விதமான பந்துவீச்சு
கடந்த கால வரலாற்றுப்படி இந்திய அணி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக உலகக் கோப்பையில் திகழ்ந்துள்ளது. தற்போது பௌலிங்கிலும் சிறந்து விளங்கும் அளவிற்கு இந்தியா மேம்பட்டுள்ளது. தக்க சமயத்தில் இந்திய அணிக்கு ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று அணியின் பௌலிங்கை வலிமை படுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் பௌலிங் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. முகமது ஷமி தனது சிறப்பான வேகம் மற்றும் நுணுக்கமான பந்துவீச்சை மேற்கொள்பவர். ஜாஸ்பிரிட் பூம்ரா பவர் பிளே மற்றும் டெத் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். டெத் ஓவரில் இவரது அனல் பறக்கும் யார்க்கர் பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்கள் மிகவும் தடுமாறுவார்கள். அதிக ரன்களை டெத் ஓவரில் கட்டுப்படுத்தியுள்ளார்.
மறுமுனையில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பௌலிங்கை சரியான நேரத்தில் வீசும் திறமை உடையவர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சீராக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுபவர். மிடில் ஓவரில் பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சில் சமாளிக்கக் கூடிய திறன் படைத்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளனர். "சைனா மேன்" என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் சிறப்பான சுழலை வீசி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் திறமை கொண்டவர்கள். அத்துடன் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் வெவ்வேறு கோணங்களில் பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை தவிக்க விடுவார்.
#4 தென்னாப்பிரிக்க பௌலிங்கை சிதைத்த காயம்
இந்திய பௌலிங்குடன் தென்னாப்பிரிக்க பௌலிங்கை ஒப்பிடுகையில் தென்னாப்பிரிக்க பௌலிங் மோசமடைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு தொடர் தோல்விகளிலிருந்து எவ்வாறு மீள்வது என்று திட்டம் தீட்டியிருக்கும் தென்னாப்பிரிக்க அணி. கண்டிப்பாக மற்றொரு தோல்வியை சந்திக்க கூடாது என்ற வகையில் தான் தென்னாப்பிரிக்கா திட்டமிட்டு செயல்படும். இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவினால் கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்வது சந்தேகம்தான்.
வலிமையான பேட்டிங் கொண்டு திகழும் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை மேற்கொள்ள மிகவும் சிரமப் படுவர். ஏற்கனவே லுங்கி நிகிடி தொடையில் ஏற்பட்ட காயத்தாலும், டேல் ஸ்டெய்ன் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்தாலும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளனர். ஸ்டேய்ன் உலகக் கோப்பை தொடர் முழுவதிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். அந்த அணியில் காகிஸோ ரபாடா மற்றும் கிறிஸ் மோரிஸ் போன்றோர் நன்றாக ஆட்டத்திறனுடன் இருந்தும் மோசமான பந்துவீச்சை மேற்கொண்டு வருகின்றனர். இம்ரான் தாஹீர் அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார்.
தேவையில்லாத ரன்களை பௌலிங்கில் அளிப்பதை தென்னாப்பிரிக்க பௌலர்கள் தவிரக்க வேண்டும். அத்துடன் இந்த அணியின் பௌளர்கள் வலிமையான இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சை மேற்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். இது கண்டிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு அவசியமான ஒன்றாகும். இந்த போட்டியிலும் மோசமான ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா வெளிபடுத்தினால் மீண்டுமொருமுறை உலகக் கோப்பையை கண்டிப்பாக தவறவிட அதிக வாய்ப்புள்ளது.