2019 உலக கோப்பை தொடர் இம்முறை 10 அணிகளை கொண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்கள் ஒரு அணிக்கு சாதகமாகவும் சில ஆட்டங்களில் மழை வந்து குறுக்கிட்டும் உள்ளன. கடந்த வாரத்தில் நடைபெற்ற ஆட்டங்கள் மட்டுமே ஆட்டத்தின் இறுதி ஓவர்கள் வரை முடிவடைந்தவையாக உள்ளன. புள்ளி பட்டியலின் அடிப்படையில் தகுதி பெறும் முதல் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றில் பங்கேற்கும் அணிகளாக உள்ளன. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் மட்டுமே ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத அணிகளாக உள்ளன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகளாக கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இம்முறை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி, இனிவரும் போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளை சந்திக்க இருப்பதால் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சற்று சிக்கல் எழுந்துள்ளது. எனவே, அரையிறுதி போட்டிக்கு நான்காவது அணியாக தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.இங்கிலாந்து:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் சிறப்பான தொடரை வெற்றியின் தொடங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. இது மட்டுமல்லாது, இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள திணறுகிறது, இங்கிலாந்து. எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் பலம்வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை சந்திக்க உள்ளது, இங்கிலாந்து அணி. கூடுதல் ரன் ரேட்டை வைத்துள்ளமையால் சற்று நன்மையாகும். 2019 உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து, நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. இனிவரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றாலே இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். ஒருவேளை இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும். ஒருவேளை இனி வரும் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே கண்டு இங்கிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் தோற்கவேண்டும். மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவினால் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் குறைந்தது இரு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால், இங்கிலாந்து அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
#2.பாகிஸ்தான்:
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான பாகிஸ்தான் அணி, நேற்றைய போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை வறுத்து எடுத்துள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைவரையும் அதிர்ச்சி அளித்து தொடரை வென்றதை போலவே இம்முறையும் அதிர்ச்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இனிவரும் மூன்று போட்டிகளில் பலம்வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மட்டுமே சற்று சவால் அளிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு அமையும். அதன்பின்னர், நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, தற்போது மோசமான ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாமிடத்தில் வகிக்கும் பாகிஸ்தான், தொடர்ந்து வெற்றி அடைந்தால் மட்டுமே அடுத்த சுற்றை நோக்கி பயணிக்க இயலும்.