2019 உலகக் கோப்பை தொடரின் முதல் இரு வாரங்களில் நடைபெற்ற ஆட்டங்களில் பெரும்பாலானவை ஓரணிக்கு சாதகமாகவே முடிந்தது. அதற்கடுத்த வாரம் மழையால் சில ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. தொடரின் பிற்பாதியில் தான் ஆட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நியூசிலாந்து அணி தனது திரில்லான வெற்றியை பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முகமது சமியை தொடர்ந்து ஹாற்றிக் விக்கெட்களை புரிந்த இரண்டாவது பவுலர் என்ற பெருமையை பெற்றார், டிரென்ட் போல்ட். எனவே, உலக கோப்பை வரலாற்றில் மிகச் சிறப்பான 5 ஹாட்ரிக் விக்கெட்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.சேட்டன் சர்மா:
உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய முதலாவது இந்தியர் என்ற பெருமையை தனதாக்கினார், சேட்டன் சர்மா. ஹரியானாவை சேர்ந்த இவர் தனது கட்டை விரல் முறிந்த போதிலும் கபில் தேவின் முயற்சியால் இந்திய அணியில் இடம் பிடித்தார், அணி கேப்டன் வைத்த நம்பிக்கையின் பேரில் விளையாண்ட இவர் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார், முதலாவதாக ரூதர்போர்டின் விக்கெட்டை இன்ஸ்விங்க்ர் முறையில் ஸ்டம்பை குறிவைத்து தாக்கி வெற்றி கண்டார். அதன்பின், ஸ்மித் மற்றும் சாட்ஃபீல்டு ஆகியோருக்கு தனது நேர்த்தியான பந்துவீச்சு தாக்குதலால் அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இவரது அசாத்தியமான பந்து வீச்சு தாக்குதலால் நியூசிலாந்து அணி 221 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் பின்னர், களமிறங்கிய இந்தியா 38 ஓவர்களிலேயே இலக்கைத் துரத்தி பிடித்த வெற்றி கண்டது இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்று போட்டிகளில் முன்னிலை பெற்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு முனையில், தோல்வியடைந்த நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற நேர்ந்தது.
#4.ஜே.பி.டுமினி:
பீல்டிங்கில் எப்போதும் சிறப்பாக செயல்படும் அணியான தென் ஆப்பிரிக்கா, 2011 உலகக் கோப்பை வரை எந்த ஒரு நாக்-அவுட் சுற்றிலும் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை வைத்திருந்தது. அதன் பின்னர், 2015ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கால் இறுதிக்கு முன்னேறி இலங்கை அணியை தோற்கடித்து இந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நான்கு ரன்களுக்கு தனது 2 தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பின்னர், தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேனாக குமார் சங்ககரா களத்தில் நின்று மேத்யூஸ் உடன் கைக்கோத்தார். இவர்களின் விக்கெட்களை வீழ்த்தும் முனைப்பில் கேப்டன் டிவிலியர்ஸ் இம்ரான் தாகிரை பயன்படுத்துவதற்கு பதிலாக டுமினியை பந்துவீச பணித்தார். இதன்படி பந்துவீசிய டுமினி, நங்கூரம் போல் நின்ற பார்ட்னர்சிப்பை உடைத்து வெற்றி கண்டார். அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக அடுத்தடுத்து பந்துகளிலும் விக்கெட்டை வீழ்த்தி உலக கோப்பை தொடர்களில் ஹாட்ரிக் விக்கெட்களை புரிந்த ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் தனதாக்கினார். டுமினி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரின் சூழல் பந்துவீச்சால் இலங்கை 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனையும் படைத்தது தென் ஆப்ரிக்கா.