2019 உலக கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், சில அற்புதங்களை அளித்துள்ளது, இந்த தொடர். மழை வந்து அவ்வப்போது குறுக்கிட்டாலும் சில வேடிக்கையும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. குறுகியகால கிரிக்கெட்டில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் பந்துவீச்சாளர்கள். அதுவும் குறிப்பாக, வேகப்பந்துவீச்சில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து தங்களது நெருக்கடியை அளித்து வருகின்றனர், வேகப்பந்துவீச்சாளர்கள். தொடரின் முதல் ஆட்டத்திலேயே புதிய பந்தில் அதிகபட்ச வேகத்தினையும் நேர்த்தியான இடைவெளியிலும் பந்துவீச்சை அசத்தி வருகின்றனர், வேகப்பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் கபளீகரம் செய்தனர். அதேபோல, நியூசிலாந்து அணியும் 136 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி அசத்தியது. எனவே, இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சிறந்து விளங்கி வரும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.ரபாடா - தென்னாப்பிரிக்கா:
உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர் ககிசோ ரபாடா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். அதே ஆட்டத்திறனை தொடர்ந்து இங்கிலாந்து மைதானங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 24 வயதான இவர் மணிக்கு 145 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். தென்னாபிரிக்க அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி கண்டுள்ளது. எனவே, இனிவரும் போட்டிகளில் இவரது அபார வேகப்பந்து வீச்சு தாக்குதல் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி அணியின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.
#4.லாக்கி பெர்குசன் - நியூசிலாந்து:
உலக கோப்பை தொடர் துவங்கும் முன்பே, இவ்வருடத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சில் அதிகமாக சராசரி கொண்டுள்ளார், நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன். உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி ஆச்சரியம் அளித்து வருகிறார். தொடர்ச்சியாக மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறார். நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் கூட இவர் 3 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3.மார்க் வுட் - இங்கிலாந்து :
நடப்பு உலக கோப்பை தொடரின் அதிவேக பந்து வீசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை கொண்டுள்ளார், மார்க் வுட். இவர் மணிக்கு 95.6 மைல் வேகத்தில் பந்தை வீசி உள்ளார். தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு அணியில் இடம்பெறாமல் போனாலும் முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டு வருகிறார். இவரும் தொடர்ந்து மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே, இந்த அந்த அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பினும், கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்று தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வண்ணம் உள்ளார், மார்க் வுட்.
#2.மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா:
எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி, தலை சிறந்த பந்துவீச்சாளர் என்றால் மிட்செல் ஸ்டார்க் தான். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மணிக்கு 160.4 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார், மிட்செல் ஸ்டார்க். தொடர்ச்சியான காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். 2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தூக்கி நிறுத்தி வருகிறார், ஸ்டார்க். இவர் சர்வசாதாரணமாக உலகக்கோப்பை போட்டிகளில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருகிறா.ர் இவரது அற்புத ஸ்விங் பந்து வீச்சு தாக்குதல் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது.
#1.சோப்ரா ஆர்ச்சர் - இங்கிலாந்து:
இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்த ஓரிரு வாரங்களிலேயே உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் தனது பெயரை இணைக்க செய்தார், சோப்ரா ஆர்ச்சர். பெரிதும் அனுபவம் இல்லாத இவர் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 146 கிலோமீட்டர் வேகத்தில் சராசரியாக பந்துவீசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்லாது, மணிக்கு 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி தனது அதிவேக பந்து வீச்சினை பதிவு செய்துள்ளார், சோப்ரா ஆர்ச்சர். மேலும், இவரது அபாரமான பந்து வீசி தாக்குதலால் இங்கிலாந்து அணியின் பவுலிங் கூடுதல் வலிமை அடைந்து உள்ளது.