2019 உலக கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தொடரை நடத்தும் அணியான இங்கிலாந்து ஒரு வெற்றியை கூட பெறாத ஆப்கானிஸ்தான் அணியிடம் மோதியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 397 ரன்களை குவித்து அமர்க்களப்படுகிறது. அவற்றில் குறிப்பிடும் வகையில், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதில் இவர் 17 சிக்சர்களை அடித்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.இதுமட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார், இயான் மோர்கன். இந்த சரவெடி தாக்குதலை வெறும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் தொடுக்காமல் சுழல் பந்து வீச்சாளர்களையும் குறிவைத்தார்,மோர்கன். உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முகமது நபியும் கூட இவரின் கண்ணில் இருந்து தப்பவில்லை. குறிப்பாக, இந்த இரு பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தின் செலுத்தத் தவறவில்லை மோர்கன்.
ரஷீத் கானின் மோசமான சாதனை:
தொடர்ந்து தனது பேட்டிங்கால் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை நிலைகுலையச் செய்த மோர்கன், உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரசித் கானின் ஓவரை வெளுத்து வாங்கினார். அவர் வீசிய 9 ஓவர்களில் 110 ரன்கள் வாரி வழங்கப்பட்டது. மேலும், இவரது எக்கனாமி விகிதம் 12.22 என்ற வகையில் படுமோசமாக அமைந்தது. இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கியவர் என்ற மோசமான சாதனையை படைத்தார், ரஷித் கான். தனது லெக் ஸ்பின் மற்றும் கூகுளி வகை பந்துகளால் உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களை கபளீகரம் செய்யும் ஆற்றல் மிக்க ரசித் கானின் ஓவரையே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பிரித்து மேய்ந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை கொண்ட ரஷித் கான், தனது மோசமான ஃபார்மால் இத்தகைய அவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், மீண்டும் ஒரு முறை சிறந்த ஆல்-ரவுண்டர் என நிரூபித்தார். ஆனால், இவரின் அனுபவம் உலக கோப்பை தொடரில் எடுபடவில்லை.
கைவிட்ட முகமது நபியின் பந்துவீச்சு:
ரசித் கானைப் போல அணியின் மற்றொரு பந்து வீச்சாளரான முகமது நபியின் ஓவரையும் நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விட்டுவைக்கவில்லை. ஐபிஎல் தொடர்களின் விளையாடிய முதலாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை கொண்ட முகமது நபி தனது ஆப் ஸ்பின் பந்து வீச்சால் நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறார். இவரது சொடுக்கு பந்துகள் மற்றும் தூஸ்ரா வகை பந்துகளாலும் எதிரணி வீரர்களை கலங்கடித்து வந்துள்ளார். இருப்பினும், நேற்று இவரது பந்துவீச்சும் சற்று எடுபடவில்லை. தொடர்ந்து இவரது பந்துவீச்சில் ரன்களை குவித்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் விக்கெட்டுகளுக்கு பின்னரும் முகமது நபியின் சோதனைக்காலம் முடியவில்லை. அதற்கு அடுத்து களம் புகுந்த இயான் மோர்கன் இவரது பந்து வீச்சை துவம்சம் செய்தார். இவரின் 9 ஓவர்களில் 70 ரன்கள் வழங்கப்பட்டது. எனவே, முழுமையாக பக்தர்களை இவரால் வீச முடியவில்லை. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களிலே கச்சிதமாய் பந்துவீசிய ஒரே வீரர் முஜிப் ரகுமான் மட்டும்தான் இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 44 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
எனவே, பேட்டிங்கில் போதிய ஆட்டத்தினை வெளிபடுத்தும் ஆஃப்கானிஸ்தான் பவிலிங்கில் சற்று கண் விழித்தால் மட்டும் 2019 உலகக்கோப்பையில் ஒரு வெற்றியினையாவது பெற் முடியும்.