2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றில் வெற்றி கண்டு இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது, ஆப்கானிஸ்தான் அணி. இன்று நடைபெறும் தொடரின் நான்காவது ஆட்டத்தில் பலமிகுந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ஆப்கானிஸ்தான். இந்த அணியின் மிகப்பெரிய பலமே அவர்களின் சுழற்பந்து வீச்சு தான். அணியில் ரஷீத் கான், முஜிப் ரகுமான், அனுபவம் மிகுந்த முகமது நபி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஓராண்டு தடைக்குப் பின்னர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளனர்.
முக்கிய வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் அணியில் ரஹமத் ஷா முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்கிறார். மூன்றாம் இடத்தில் களம் இறங்கும் பேட்ஸ்மேனான இவர், சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி ஆல்ரவுண்டர் ரஷீத் கானை பெருமளவு நம்பியுள்ளது. இங்கிலாந்து சீதோசன நிலைக்கு ஏற்ப இவரின் பந்து வீச்சு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடைக்கு உள்ளான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தற்போது சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளனர். பயிற்சி ஆட்டங்களில் இவர்களின் ஆட்டம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, ஸ்டீவன் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து தன்னை சீண்டிய இங்கிலாந்து ரசிகர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதில் அளித்தார். இந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மிச்செல் ஸ்டார்க் திகழ்கிறார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார், மிச்செல் ஸ்டார்க்.
எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:
ஆஃப்கானிஸ்தான் அணி:

பந்துவீச்சில் ஆலம் அல்லது ஹமீத் ஹசன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் ஆடும் லெவனில் இணைக்கப்படலாம். சமியுல்லாஹ் சின்வாரி லெவனில் இடம் பெறாமல் போகலாம்.
முகமது ஷேசாத், ஹஸ்ரத்துல்லாஹ் சாசாய், ரஹ்மத் ஷா, ஆஸ்கர் ஆப்கான், ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிடி, முகமது நபி, ரஷீத் கான், தவ்லத் ஜர்ரான், குல்பாதின் நயிப், ஹமீத் ஹாசன் மற்றும் முஜிப் ரகுமான்.
ஆஸ்திரேலிய அணி:

ஆஸ்திரேலிய அணியின் நான்காம் இடத்திற்கான பேட்டிங்கில் ஷான் மார்ஷ் அல்லது உஸ்மான் கவாஜா ஆகியோரில் யாரேனும் ஒருவர் இடம்பெறலாம்.
ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மிச்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கனே ரிச்சர்ட்சன் மற்றும் ஆடம் சாம்பா.