உலக கோப்பை தொடரின் முதல் சுற்றின் நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது, வங்கதேசம். மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி நம்பிக்கையுடன் தனது போராட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது. குல்பாதின் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் பலமான இந்தியாவுக்கு சவால் அளித்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இவ்விரு அணிகளும் நாளைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்க உள்ளன. எனவே, வங்கதேச அணியின் வெற்றிக்கு காரணமாக அமைய உள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஷகிப் அல்-ஹஸன்:

உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் அதிக ரன்களைக் குவித்த வீரராக திகழ்கிறார், ஷகிப் அல்-ஹஸன். எவ்வித சந்தேகமுமின்றி, தனது அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்திய வண்ணம் இருந்து வரும் இவர், இந்த தொடரில் இதுவரை சந்தித்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முறையே 75, 64, 121, 124* மற்றும் 41 ரன்களை குவித்து அசத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு மிடில் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் கட்டுப்படுத்தும் விதமாக முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். எனவே, நாளைய போட்டியில் இவர் சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
#2.தமிம் இக்பால்:

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால், மேலும் ஒரு வலிமை மிகுந்த வீரராக கருதப்படுகிறார். நாளை சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது கிளாசிக் வகை ஷாட்களால் அற்புதம் படைக்க காத்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்து உள்ளார். நாளைய போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அளிப்பார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
#3.முஸ்தபிசுர் ரஹ்மான்:

வங்கதேச அணியின் பவுலிங்கில் நம்பிக்கை அளித்து வரும் இளம் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், நடப்பு உலக கோப்பை தொடரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா 3 விக்கெட்களை குவித்துள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களை கூட தமது பந்துவீச்சால் கபளீகரம் செய்து வருகிறார். இவரது மிதவேக மற்றும் மாறுபட்ட பந்துவீச்சு தாக்குதலால் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே ஆட்டம் இழக்க நேரிடலாம். எனவே, கேப்டன் மோர்தசா இவரின் பந்துவீச்சை மிகவும் எதிர்நோக்கியுள்ளார்.