நான்கு வருட காத்திருப்புக்கு பின்னர் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உலக கோப்பை தொடரை எதிர்நோக்கியுள்ளது. 2019 உலகக்கோப்பை தொடர் வரும் மே 30-ம் தேதி இந்த ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த பெருமை மிக்க தொடரில் 10 தலை சிறந்த கிரிக்கெட் அணிகள் ஒருவருக்கொருவர் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளனர். இன்னும், இந்த மிகப்பெரிய திருவிழா துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியினரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். எனவே, ஒவ்வொரு தரப்பிலும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#4.சிறந்த சுழற்பந்து வீச்சாளர் - குல்தீப் யாதவ்:

உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் துருப்புச்சீட்டாக சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு உள்ளது. உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து குல்தீப் யாதவின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. "சைனா மேன்" பவுலர் என்று அழைக்கப்படும் குல்தீப் யாதவ் சமீப காலங்களில் இந்திய அணியின் குறுகிய கால போட்டிகளில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 87 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை அள்ளியது இவரது சிறந்த பந்துவீச்சாக தற்போது வரை உள்ளது. அதுவும் இந்த சாதனை இங்கிலாந்து மைதானத்தில் முடிந்தவை ஆகும்.
#3. சிறந்த வேகப்பந்து வீச்சாளர் - ஜஸ்ப்ரீத் பும்ரா:

சந்தேகத்திற்கு இடமின்றி, தற்போதைய கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா. அணியில் இடம் பெற்றுள்ள முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் இணைந்து தனது அபார பந்துவீச்சு தாக்குதலைத் தொடுக்க உள்ளார், ஜஸ்ப்ரீத் பும்ரா. 25 வயதான இவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை கூட தமது பௌலிங்கால் வீழ்த்திவிடுவார். இதுவரை 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 85 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும் இவரது எக்கனாமி 4.51 என்ற அளவில் மிகச் சிறப்பாக உள்ளது. தமது முதலாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இவர், தாக்கத்தை ஏற்படுத்த ஆயத்தமாகி வருகிறார்.
#2.சிறந்த ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ற ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார், ஹர்திக் பாண்டியா. இந்திய அணியில் விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் தனது அபார பங்களிப்பால் இருவரையும் முந்தி சிறந்த ஆல்-ரவுண்டராக உள்ளார். இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 731 ரன்களையும் 44 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரிலும் தொடரின் சிறந்த ஆட்டத்தை முடித்து வைக்கும் வீரர் என்ற பெருமையையும் பெற்றார், ஹர்திக் பாண்டியா.
#1.சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி:

சந்தேகத்திற்கும் இடமின்றி, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்றால் விராட் கோலி தான். இவர் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோருக்குப் பின்னர் களமிறங்கும் விராட் கோலி ரன்களை குவிக்கும் இயந்திரமாக அணிக்கு செயல்பட்டு வருகிறார். 2015 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இவர், அடித்த சதங்களின் எண்ணிக்கை பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த சதங்களை விட அதிகம் என்பது மற்றுமொரு சிறப்பாகும். உலக கோப்பை தொடர்களில் இதுவரை 17 போட்டிகளில் விளையாடிய 587 ரன்களை குவித்துள்ளார், விராட் கோலி. எனவே, தமது ஆதிக்கத்தை இங்கிலாந்து மண்ணிலும் இம்முறை தொடர உள்ளார் விராட் கோலி.