தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரீஜ் நோர்டிச் கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2019 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக கிறிஸ் மோரி-ஸை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அன்று போர்ட்ஸ் எலிசபெத்-தில் வலை பயிற்சியில் அன்ரீஜ் நோர்டிச் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இந்த கட்டை விரல் முறிவு ஏற்பட்டது. இவர் உடனே விரல் நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டார். உடைந்த விரல் சரியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிறிய வலி இருக்கும் மற்றும் அது பூரணமாக குணமடைய குறைந்தது 8 வாரங்களாவது ஆகும் என மருத்துவர் முகமது மஸாஜீ தெரிவித்ததாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் தனியார் கிரிக்கெட் வலைதளம் ஒன்றிற்கு நேர்காணலில் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க முதன்மை உலகக் கோப்பை அணியில் அன்ரீஜ் நோர்டிச் இடம்பெற்றிருந்தார். தோல் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் 2019 ஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு முன்பாகவே கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியிலிருந்து அன்ரீஜ் நோர்டிச் விலகியிருந்தார். இதனால் அந்த அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அன்ரீஜ் நோர்டிச் கடந்த வருடத்தில் டிசம்பர் மாதத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.
25 வயதான் அன்ரீஜ் நோர்டிச் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலாக வீசும் திறமை படைத்துள்ளார். 2018 மெக்ஜான்ஸி சூப்பர் லீக்கில் 3 போட்டிகளில் பங்கேற்று 6.91 என்ற அருமையான எகானமி ரேட்-டுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
32 வயதான ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் முதலில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது அன்ரீஜ் நோர்டிச்-ற்கு பதிலாக தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பங்கேற்று வருகிறார். இந்த வருட ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
2019 ஐபிஎல் சீசனில் கிறிஸ் மோரிஸ் 9 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரது எகனாமி ரேட் 9.27 ஆக மிக அதிகமாக உள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தேர்வுக்குழு ஆன்டில் பெஹில்க்வாயோ மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகிய இரு ஆல்-ரவுண்டர்களை 15 பேர் கொண்ட முதன்மை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்திருந்தது. 2018 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கிறிஸ் மோரிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் முஸாஜி அன்ரீஜ் நோர்டிச் காயம் பற்றி கூறியதாவது:
" கட்டை விரலில் ஏற்பட்டுள்ள இந்த காயம் எதிர்பாரத விதத்தில் ஏற்பட்டது ஆகும். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் அன்ரீஜ் நோர்டிச்-ற்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த காயத்திலிருந்து மீண்டு உலகக் கோப்பை தொடருக்கு கடும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த வருடத்தில் இவருக்கு ஏற்பட்ட சில காயங்களிலிருந்து சரியாக மீண்டு வந்துள்ளார். இவர் தன்னை தானே மெருகெற்றிக் கொண்டு முன்னேற துடிப்பவர். இதுவே இவரது மிகப்பெரிய வலிமையாகும்".