2019 உலக கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியிலேயே பலம்வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி இனிவரும் போட்டிகளில் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிசிஸ் இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் முதலில் பந்து வீசும் முடிவை டுபிளிசிஸ் எடுத்திருந்தார். இதன்படி ஆட்டத்தின் முதலாவது ஓவரில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் பந்துவீசினார். இம்ரான் தாகிர் வீசிய பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர், ஜாசன் ராயுடன் ஜோ ரூட் கைகோர்த்து சிறப்பாக விளையாடினார். அதன்பின்னர் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் நம்பிக்கையளிக்கும் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான இறுதி கட்ட ஓவர்களில் ரன்களைக் குவிக்க சற்று சிரமப்பட்டாலும் பென் ஸ்டோக்ஸ் அதனை சமாளித்து திறம்பட ரன்களை குவித்தார்.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹாஷிம் அம்லா ஹெல்மட் தாக்கியதால் களத்தை விட்டு வெளியேறினார். விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் மற்றும் வேண்டர் டஸ்ஸன் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் இவர்களுக்கு ஒத்துழைக்க வேறு எந்த வீரரும் முன்வரவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 2019 உலக கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. எனவே, இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததற்கான மூன்று காரணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.பேட்ஸ்மேன்கள் களமிறங்கிய உடனே பந்துவீசிய பகுதிநேர பந்துவீச்சாளர்கள்:
ஜோ ரூட் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தவித்துக் கொண்டிருந்த வேளையில், கேப்டன் இயான் மோர்கன் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் களம் புகுந்தனர். மிடில் ஓவர்களான அந்நேரத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் இந்த இரு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நெருக்கடி அளிக்க தவறினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் டூமினி மற்றும் மார்க்கரம் ஆகிய இரு பகுதி நேர பந்துவீச்சாளர்களை அழைத்து பந்துவீச செய்தார். இவர்களின் பந்துவீச்சு புதிதாக களமிறங்கிய பேட்ஸ்மேன்களின் நெருக்கடியை குறைத்தது. ஒருவேளை சிறந்த பந்துவீச்சாளர் யாரேனும் பந்து வீசி ஏதேனும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்.
#2.சோப்ரா ஆர்ச்சர்க்கு எதிரான தாக்குதலை தொடரவில்லை:
இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான சோப்ரா ஆர்ச்சர் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார். இவரின் ஷார்ட்டான பவுன்ஸ் பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்காரர் ஹாஷிம் அம்மாவின் ஹெல்மட்டில் அடித்து அவரை நிலை குலைய வைத்தது. மேலும், அவர் களத்தை விட்டு வெளியேறினார். ஆர்ச்சரின் பந்துவீச்சில் மற்ற பேட்ஸ்மேன்கள் யாவரும் அடித்து விளையாடவில்லை. மேலும், இவரது பந்துவீச்சில் கேப்டன் டுபிளிசிஸ் மற்றும் மார்க்கரம் ஆகிய இரு சிறந்த பேட்ஸ்மென்கள் தங்களது விக்கெட்டை இழந்து தென்னாபிரிக்க அணிக்கு மேலும் அதிர்ச்சி அளித்தனர். ஒருவேளை இந்த இளம் பந்துவீச்சாளர்கள் எதிராக ஆக்ரோஷமாக செயல்பட்டிருந்தால், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
#1.தேவையில்லாத ஷாட்கள் மற்றும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமையவில்லை:
300 ரன்களை எந்த ஒரு அணியும் கடக்கும்போது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் அந்த அணி வீரர்களால் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு, நேற்று தென் ஆப்பிரிக்க அணி 311 ரன்களை சேசிங் செய்த போது அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்க தவறினர். விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் மற்றும் வேண்டர் டஸ்ஸன் ஆகியோர் இவரும் இணைந்து 85 ரன்களை குவித்ததே இரண்டாவது இன்னிங்சில் அதிக பட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இவர்கள் இருவரை தவிர மற்ற வீரர்கள் யாவரும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவில்லை. அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தவறான ஷார்ட் தேர்வால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை காணும்போது அனுபவம் இல்லாத பேட்டிங்கை போலவே தென்பட்டது. ஏனெனில், தவறான ஷாட் தேர்வால் இவர்களில் பலரும் தங்களது விக்கெட்டை இழந்தனர். தென்ஆப்பிரிக்கா அணி தோல்வி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.