உலக கோப்பை தொடரின் பன்னிரண்டாவது போட்டியான வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு தங்களது கடும் ஆட்டத்தினை வெளிப்படுத்தக் கூடும். 2019 உலக கோப்பை தொடரில் வங்கதேச மணி தங்களது இரண்டாவது வெற்றியினை பெறுவதற்கான முனைப்பில் ஈடுபட உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோற்றிருந்தது, வங்கதேச அணி. இதன் மூலம், பலரது ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் வங்கதேச அணி ஈர்த்தது.
ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணியான இங்கிலாந்து ஜோ ரூட், ஜோஸ் பட்லர், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட பல தரமான வீரர்களை கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் பௌலிங் சற்று எடுபடாத காரணத்தினால் தோற்றிருந்தது. எனவே, கடந்த போட்டியில் செய்த தவறை திருத்திக்கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இயலும். வங்கதேச அணியில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மைதான புள்ளிவிவரங்கள்:

முதலாவது இன்னிங்சில் சராசரியான ஸ்கோர் - 223
இரண்டாவது இன்னிங்சில் சராசரியான ஸ்கோர் - 210
அதிகபட்ச ஸ்கோர் - 342 / 8 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்துள்ளது.
குறைந்தபட்ச ஸ்கோர் - 136 / 10 நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களை மட்டுமே குவித்து தங்களது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்ச சேசிங் சாதனை - 304 / 6 இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது.
இங்கிலாந்து அணி:

இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆடும் லெவனிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லியாம் பிளங்கெட் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவன்:
இயான் மோர்கன், ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மொயின் அலி, சோப்ரா ஆச்சர், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், மார்க் வுட்.
வங்கதேச அணி:

ஆடும் லெவனில் எந்த ஒரு மாற்றமுமின்றி கடந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்தப் போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவன்:
தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முஹம்மது மிதுன், மக்மதுல்லா, மொசடக் உசைன், முகமது சைபுதீன், மெஹ்தி ஹஸன், மோர்தசா, முஸ்தபிசுர் ரஹ்மான்.