இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஜீன் 14 அன்று பலபரிட்சை நடத்த இருக்கின்றன. இந்த இரு சிறந்த அணிகளுக்கு இடையிலான போட்டி அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி 2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ஓவர்களுக்கு 386 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேசம் 280 ரன்களில் சுருண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் அதிரடி வீரர்களை கொண்ட ஒரு கலவையாக திகழ்கிறது. பாகிஸ்தானிற்கு எதிராக முதல் உலகக்கோப்பை போட்டியில் 13.4 ஓவர்களிலேயே 107 ரன்களுக்கு சுருட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மேற்கிந்தியத் தீவுகள். சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இரு அணிகளிலுமே வலிமையான பேட்டிங் லைன்-அப் கொண்டு திகழ்கிறது. எனவே இந்த போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும். நாம் இங்கு இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ள 5 வீரர்களை பற்றி காண்போம்.
#5 செல்டன் காட்ரேல்
காட்ரேல் உலகக் கோப்பை தொடரில் ஒரு சிறப்பான வீரராக திகழ்ந்து வருகிறார். இவரது விக்கெட் கொண்டாட்டம் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். இந்த பந்து வீச்சாளர் விக்கெட் எடுத்தால் உடனே ஓய்வறையை நோக்கி வணக்கம் தெரிவிப்பார்.
இந்த வணக்கத்திற்கு காரணம், அவர் ஒரு இராணுவ வீரர் என்பதே ஆகும். செல்டன் காட்ரேல் ஜமைக்கா இராணுப படை வீரர் ஆவார். இதனால் இவர் தெரிவிக்கும் வணக்கம் ஒரு மரியாதை நிமித்தமான செயலாகும்.
காட்ரேல் தான் வணக்கம் செலுத்திய உடன் சற்று பின்னோக்கி வளைந்து ஒலி எழுப்பி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்துவார். இந்த வணக்கம் மூலம் 29 வயதான காட்ரேல் கிரிக்கெட் மீது எவ்வளவு அன்பு மற்றும் மரியாதை வைத்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது.
காட்ரேலிற்கு இவ்வருட உலகக் கோப்பை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 18 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 56 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த திங்களன்று மழை காரணமாக கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆரம்ப ஓவரை வீசினார். மழை குறுக்கிடும் முன்பாக தென்னாப்பிரிக்கா 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இந்த இரு விக்கெட்டுகளையும் காட்ரேல் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. தனது இடதுகை வேகப்பந்து வீச்சு மூலம் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தார்.
இவரது அதிரடி தொடருமெனில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் கடும் நெருக்கடியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
#4 ஜோஃப்ரா ஆர்சர்
2019 உலகக் கோப்பையில் தொடர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் ஜோஃப்ரா ஆர்சர். இவரது பந்துவீச்சு மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் திறமை கொண்டவர் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்சர் கூடுதல் பவுன்ஸுடன் வீசும் திறமை உடையவர். இவரது பவுண்ஸர் மின்னல் வேகத்தில் இருக்கும். முதல் போட்டியில் ஹாசிம் அம்லா இதற்கு இரையாணார்.
ஆர்சர் வீசிய பவுண்ஸர் நேரடியாக ஆம்லாவின் தலைக்கவசத்தை தாக்கியது. இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பேட்ஸ்மேன் ஹாசிம் அம்லா ஒரு சரியான உடற் தகுதியில்லாத காரணத்தால் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் இடம்பெறவில்லை.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 27 ரன்களை பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
24 வயதான இவர் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில் 153 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசினார்.
வரும் வெள்ளியன்று நடைபெற உள்ள போட்டியில் ஆர்சர் இதே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மேற்கிந்தியத் தீவுகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை அவ்வளவு எளிதில் நம்ப இயலாது. ஆர்சரின் சிறப்பான யார்க்கர் மற்றும் மிதவேக பந்தின் மூலம் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த திட்டமிடுவார்.
#3 பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸ் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வருகிறார். இவரது பேட்டிங், பௌலிங் மற்றும் பிரம்மிக்க வைக்கும் சில கேட்சுகள் காண்பவரை ஆச்சரியமூட்டும்.
2019 உலகக் கோப்பையில் மேற்குறிப்பிட்ட மூன்றிலுமே 28 வயதான பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 89 ரன்களை குவித்து இங்கிலாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் பென் ஸ்டோக்ஸ். அத்துடன் ஃபீல்டிங் செய்யும் போது மிகப்பெரிய கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார்.
ஆன்டில் பெலுக்வாயோ பவுண்டரி திசை நோக்கி பந்தை சுழட்டினார். ஸ்டோக்ஸ் பவுண்டரி லைனிற்கு முன்னதாக நின்று கொண்டிருந்தார். ஆனால் அவர் பந்தை தவறான திசையில் கணிக்கவில்லை. ஸ்டோக்ஸ் தலைக்கு மேல் பந்து சென்றது. இருப்பினும் சற்று குதித்து பந்தை மடக்கி பிடித்தார்.
ரசிகர்கள் ஒரு நிமிடத்திற்கு ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். அனைவருமே மிகப்பெரிய பிரம்மிப்புடன் இருந்தனர்.
இந்த போட்டியில் 12 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 23 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் ஒரு முன்னணி வீரராக ஸ்டோக்ஸ் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
#2 ஷை ஹோப்
கடந்த சில ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேனாக ஷை ஹோப் உள்ளார். 57 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 50.56 சராசரியை தன்வசம் வைத்துள்ளார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையை மெதுவாக ஆரம்பித்தார். 2016 நவம்பரில் தனது இரண்டாவது சர்வதேச போட்டியில் முதல் சதத்தை விளாசினார். இவரது இரண்டாவது சதம் 34 போட்டிகளுக்கு பிறகுதான் வந்தது. கிட்டத்தட்ட இரு வருடங்கள் ஆகின. அக்டோபர் 2018ல் இந்தியாவிற்கு எதிராக தனது இரண்டாவது சதத்தினை விளாசினார்.
இவரது அதிரடி ரன் குவிப்பு நிறுத்தப்படவில்லை. ஷை ஹோப்பின் கடந்த 18 இன்னிங்ஸில் 5 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளியன்று நடைபெற உள்ள இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளார். 25 வயதான இவர் அதிக ஷார்ட் பந்துகளை எதிர்கொள்கிறார். ஹோப் தற்போது வரை ஷார்ட் பந்தில் தடுமாறி வருகிறார். இந்த குறையை நீக்க ஹோப் முயற்சி எடுத்தது போல் தெரியவில்லை.
இவர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே பேட் செய்துள்ளார். ஆட்டத்தின் ஆரம்ப ஓவர்களை மட்டும் கட்டுபடுத்தி ஷை ஹோப் விளையாடி விட்டால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய ரன்களை விளாசுவார்.
#1 ஜேஸன் ராய்
ஜேஸன் ராய் இங்கிலாந்து மண்ணில் சிறந்த தொடக்க ஆட்டத்தை அதிரிடியாக வெளிபடுத்தும் திறமை கொண்டவர். அதிவேகமாக ரன்களை குவிப்பதில் கெட்டிக்காரர். இவர் விளாசியுள்ள 8 சதங்களுமே குறைவான பந்துகளில் வெளிப்பட்டுள்ளது.
28 வயதான இவர் 2019ல் மட்டும் 3 சதங்களை விளாசியுள்ளார்.
முதல் சதம் பிப்ரவரியில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 123 ரன்கள் குவித்தார். இவ்வருட மே மாதத்தில் மட்டும் தொடர்ந்து 4 அரைசதங்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 54 ரன்களை அடித்தார்.
ஜேஸன் ராய் பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக விளையாடி 153 ரன்களை விளாசித் தள்ளினார்.
இவரது ரன் குவிப்பின் மூலம், ராய் ஏன் ஒரு அதிகம் மதிப்பிடப்பட்ட இங்கிலாந்து வீரர் என நமக்கு தெரிய வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆரம்ப ஓவர்களை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்த திட்டமிட்டிருப்பார். உலகில் நீண்ட பேட்டிங் லைன்-அப் உடன் திகழும் இங்கிலாந்து அணியில், ஜேஸன் ராய் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்.