இந்திய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் சவுத்தாம்டனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிரடி துவக்கத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என மூன்றிலும் அசத்திய இந்திய அணி மூன்றாவது தொடர் தோல்வியை தென்னாப்பிரிக்க அணிக்கு அளித்தது.
இந்திய அணியின் முதல் வெற்றிக்கு பௌலிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தென்னாப்பிரிக்க அணியை 227 ரன்களில் சுருட்டியது இந்தியா. பேட்டிங்கில் ரோகித் சர்மா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட தனிஒருவராக இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான ஆல்-ரவுண்டர் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அணி தனது இரண்டாவது உலகக் கோப்பை போட்டியில் ஜீன் 9 அன்று ஆஸ்திரேலியாவை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளது. ஆஸ்திரேலியா ஐசிசி ஓடிஐ தரவரிசையில் 5வது இடத்தில் இருந்தாலும், உலகக் கோப்பை தொடரில் எப்பொழுதுமே முன்னணியாக திகழும். ஆஸ்திரேலியா 2019 உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சிறந்த அணியாக வலம் வந்து கொண்டுள்ளது.
கிரிக்கெட்டில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டிகளில் இந்திய அணிக்கு பெரும் தடுமாற்றத்தை உண்டாக்கிய 5 ஆஸ்திரேலிய வீரர்களைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
#5 பேட் கமின்ஸ்
கடந்த வருடத்தின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய போது பேட் கமின்ஸ் சிறப்பான ஆட்டத்தை இந்தியாவிற்கு எதிராக வெளிபடுத்தவில்லை. அந்த தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஓடிஐ தொடரை இந்தியா கைப்பற்றியபோது தனி ஒருவராக போராட முயன்றார் பேட் கமின்ஸ்.
பேட் கமின்ஸ் 18 வயதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இவரது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தற்போது சிறப்பான வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களுள் இவரும் ஒருவராக திகழ்கிறார். அத்துடன் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
உயரமான அதிரடி வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான சாதனையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக 11 போட்டிகளில் பங்கேற்று 27.33 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 70 ரன்களை பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சவுத்தாம்டனில் நடந்த போட்டியில் காகிஸோ ரபாடா இந்திய தொடக்க ஆட்டக்காரர்களை தடுமாறச் செய்தார். இவரது பந்துவீச்சை போலவே பேட் கமின்ஸும் பந்துவீசி இந்திய தொடக்க ஆட்டக்காரர்களை தடுமாறச் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு ஆடுகளத்தின் தன்மை மிக முக்கியம்.
#4 க்ளென் மேக்ஸ்வெல்
அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தும் திறமையுடைய மேக்ஸ்வெல் சிறந்த ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் சுழற்பந்து வீச்சை அதிரடியாக எதிர்கொள்ளும் திறமை கொண்டவர். பௌலிங்கில் இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக மிடில் ஓவரில் இருப்பது சுழற்பந்து வீச்சுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்ஸ்வெல் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டார். ஆனால் நன்றாக நிலைத்து விளையாட ஆரமித்தால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி ஆஸ்திரேலிய அணிக்காக நிறைய போட்டிகளில் வெற்றியை தேடித் தந்துள்ளார். இவரது ஓடிஐ சராசரி 33.4 ஆனால் மேக்ஸ்வெல்லின் ஸ்ட்ரைக் ரேட் 122.1 ஆகும். மேக்ஸ்வெல்லின் பேட்டிங் இந்திய அணிக்கு எதிராக மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மட்டும் 34.19 சராசரி மற்றும் 128.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 718 ரன்களை குவித்துள்ளார்.
மேக்ஸ்வெல் ஒரு 360 டிகிரி பேட்ஸ்மேன், ஆடுகளத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசும் திறமை உடையவர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்விப் மற்றும் ரிவர்ஸ் ஸ்விப்பினை சரியாக வெளிபடுத்துபவர். இவர் ஒரு அருமையான ஃபீல்டர் மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்டுகளை வீழ்த்துபவர்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது மேக்ஸ்வெல் ஒரு அதிரடி கிரிக்கெட் வீரர் ஆனால் சீரான பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் சில அதிரடி ஹீட் மூலம் ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றம் சிறப்பான பேட்ஸ்மேன். எனவே உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இவருக்கு எதிராக சற்று கவணத்துடன் செயல்படும்.