பன்னிரண்டாவது உலக கோப்பை தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வியே சந்திக்காத அணிகள் என்ற பெருமையை கொண்டுள்ளன. தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து, இரு தோல்விகளையும் மற்றும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா ஒரு தோல்வியையும் கண்டு உள்ளன. இந்த உலக கோப்பை தொடரில் குறிப்பிடும் வகையில், வங்கதேசம் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை கண்டது, இலங்கை. ஒரு சிறப்பான தொடரை அளிக்க தவறியுள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறும் அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. எனவே, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சில திரில்லான ஆட்டங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்கா:
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று ஆரம்ப போட்டியிலேயே அமர்க்களப்படுத்தியது. இந்த ஆட்டத்திற்கு முன்னர், இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 20 போட்டிகளில் வெறும் மூன்றில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்று மோசமான சாதனையை படைத்திருந்தது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ஆம்லா ஆகியோர் காயங்களால் அவதிப்பட்டு விளையாடாததால் சற்று பின்னடைவாக அமைந்தது. டாஸ் வென்று வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது, தென்னாபிரிக்கா. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வங்கதேசம் இரு விக்கெட்களை இழந்து தவித்திருந்த வேளையில் 4 ஓவர்கள் வீசிய லுங்கி இங்கடி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு போட்டியிலிருந்து விலகினார். இதன் பின்னர், வங்கதேச அணியின் பேட்டிங் இணையான ஷகிப் அல்-ஹஸன் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் கூட்டணி ஆட்டத்தை மீட்டெடுத்தது. மூன்றாம் விக்கெட்டுக்கு இந்த இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அதன்பின்னர், இறுதிக்கட்ட ஓவர்களில் கவனம் செலுத்திய மகமதுல்லா 33 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். ஒருநாள் போட்டிகளில் தங்களது அதிகபட்ச ஸ்கோரான 330 ரன்களை பதிவு செய்தது, வங்கதேசம்.
இதன் பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 26 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை குவித்து இருந்தது. எதிர்பாராதவிதமாக கேப்டன் டு பிளிசிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர், டுமினி ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.