#1.நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா:
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் வாழ்வா - சாவா? என்ற போட்டியாக தென்னாபிரிக்க அணிக்கு அமைந்தது. தொடரின் ஒரு போட்டிகளில் கூட தோல்வி பெறாத நியூசிலாந்து, அதற்கு முன்னர் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் புரட்டி எடுத்து 3 வெற்றிகளைக் கண்டு இருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ் டாஸில் தோற்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் பேட்டிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதன்படி களம் புகுந்த குயின்டன் டி காக் விக்கெட்டினை விரைவிலேயே இழந்தது, தென்னாப்பிரிக்க அணி. தொடரின் முதல் அரைசதம் கண்ட ஹசிம் அம்லா 83 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் 241 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணியால் குவிக்க முடிந்தது.
இதன் பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான காலின் மன்றோ விக்கெட்டை விரைவிலேயே இழந்திருந்தது. இருப்பினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் அதிரடியாக விளையாடினார். இந்த அதிரடியான ஆட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஸ் டெய்லர் மற்றும் டாம் லதம் ஆகியோரின் விக்கெட்டுகளை தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார், கிறிஸ் மோரிஸ். இதன் காரணமாக, நியூஸிலாந்து அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில், கேப்டன் வில்லியம்சன் தனது போராட்டமான ஆட்டத்தினை தொடுத்தார். 72 பந்துகளில் அரைசதம் கடந்தார், வில்லியம்சன். இதன் பின்னர், களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஜிம்மி நீசம் விக்கெட்டையும் நியூஸிலாந்து அணி இழந்திருந்தது. ஆல்ரவுண்டர் காலிங் கிராண்ட் ஹோம் உடன் இணைந்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் அற்புதமாக சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
தென்னாபிரிக்க அணியின் டேவிட் மில்லர் தனக்கு வழங்கப்பட்டிருந்த ரன்-அவுட் வாய்ப்பை வீணடித்தார். சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிரின் பந்தில் வில்லியம்சன் பேட்டில் சற்று உரசி விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனை கண்டுகொள்ளாத தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு ஆட்டம் முடிவு சற்று பாதகமாக அமைந்தது. 7 பந்துகளில் 12 ரன்களை குவித்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய நியூசிலாந்து அணியின் கிராண்ட் ஹோம் விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர், ஆட்டத்தை சாதுரியமாக நகர்த்தி சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார், கேப்டன் வில்லியம்சன்.