தற்போது நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து உள்ள தென் ஆப்பிரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஹாஷிம் அம்லா தொடக்கத்தில் சறுக்கிய பின்னர், தற்போது அரைசதங்களை கடந்து ஓரளவுக்கு பார்முக்கு திரும்பியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வந்த ஆம்லா, அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளார். மேலும், கடந்த பத்து வருடங்களாக தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கின் தூணாக செயல்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் கூட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2019 உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்னர், போதிய பார்ம் இன்றி தவித்த ஆம்லா அணியில் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களுடைய வலுத்தது. இருப்பினும், இறுதி கட்ட நேரத்தில் 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றார். ஹசிம் அம்லா நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னர் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், வெறும் 123 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றமளித்தார். அதன் பின்னர், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் குவித்து இழந்த பார்மை மீட்டெடுத்தார். இருப்பினும், இவரது ஸ்ட்ரைக் ரேட் உயர்ந்த பாடில்லை.
ஹாஷிம் அம்லாவின் ஓய்வு பற்றி தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் பேசி வருவதை கைவிடும்படி அணியின் கேப்டன் டுபிளிசிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து ஹாஷிம் அம்லா சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் எனவும் தெரிவித்துள்ளார், டுபிளிசிஸ்.
"அவர் தொடர்ந்து விளையாட நினைக்கிறார். ஆகையால், நீங்கள் அனைவரும் இதுபோன்று ஒரு மகத்தான வீரரின் முடிவைப் பற்றி பேசுவதை விட்டுவிடுங்கள்",
என்று கூறியுள்ளார், டுபிளிசிஸ். இதே கேள்வியை தொடக்க ஆட்டக்காரரான ஹசிம் அம்லாவிடம் எழுப்பப்பட்டபோது,
"எனக்கு தெரியாது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. இது மிக நீண்ட காலம் ஆகும். இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்பு, நான் வீட்டிற்கு சென்று எனது குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க விரும்புகின்றேன் மற்றும் நான் அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவேன்".
ஒரு வேளை நீங்கள் மீண்டும் அணிக்கு தொடர்ந்து விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கும் "தேர்வு செய்யப்பட்டால் விளையாடுவேன்" என்று பதிலளித்துள்ளார், ஆம்லா.
லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி தென் ஆப்பிரிக்க அணிக்கு எஞ்சியுள்ளது. இதன் பின்னர் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், நடைபெறும் தொடர்களில் அனுபவம் வாய்ந்த ஹசிம் அம்லாவை விடுத்து இளம் வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தேர்வாணையம் வாய்ப்பளிக்குமா என்பதை சற்று பொறுத்திருந்து காண்போம்.